x

ஜூன் 21 : எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம் :

“தீட்டா அலை’யிலும் ‘ஆல்பா அலை’யிலும் விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால் மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பவனவாக இருந்தாலும், அவை நம்மைப் பாதிக்காது.

உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும் ஆனால் கேட்காது. அதுபோலவே தேவையற்ற அலைக்கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டுவிலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும்.

நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத்திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத்திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும். எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும் அந்தத் தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக்காலத்தில் எந்தச் சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.

“படிக்கும்போது தவம் செய்யலாமா, இரவில் செய்யலாமா?” என்றெல்லாம் கேட்பார்கள். தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை திசையும் வேண்டியதில்லை. அறிவை விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக் கூடிய ஒரு பயிற்சி தான் தவம். அதற்குக் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலேயும் செய்யலாம். இதையெல்லாம் உணர்ந்து நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும் சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும் வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்கு கொடுக்கும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * *

 

“அகத் தவம் தீவினை யகற்றும்

அருள் நெறியை இயல்பாக்கும் !

அகத் தவமே இறைவழிப்பாடனைத்திலும்

ஓர் சிறந்த முறை !

அகத் தவமே உயிர் வழிபாடதனை

விளக்கும் ஒளியாம் !

அகத் தவமே மதங்களெல்லாம்

அடைய விரும்பும் முடிவு ! “

சிலை வணக்கத்தின் எல்லை :

“இறைநிலையே அறிவாக இருக்கும் போது

இவ்வறிவை சிலை வடிவத் தெல்லை கட்டி

குறை போக்கப் பொருள், புகழ், செல்வாக்குவேண்டி

கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;


நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண

நேர் வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று

முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற

முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்.

“குறைபோக்கும் குண்டலினி தவத்தின் மூலம்

குவிந்து மனம் உயிரோடு உறையும் மேலும்

மறை பொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று

மா அமைதி அனுபவிக்கும் நிலைக்களம் ஆம்

இறைவனது திருநிலையில் இணையும் அப்போ

இன்ப துன்ப விருப்பு வெறுப்பிவை கடந்து

நிறைவு பெரும் தீய வினையகலும் வாழ்வில்

நிகழ்வதெல்லாம் பேரின்ப ஊற்றாய் மாறும்”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூன் 22 : கடமையில் விழிப்புணர்வு

PREV      :  ஜூன் 20 : மனநிறைவு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!