x

ஜூன் 20 : மனநிறைவு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


மனநிறைவு :

“பிறரிடம் குறைபாட்டையே எடுத்து அலசிப் பார்ப்பதை விடுத்து குறைவில்லாது நிறைவையே பார்க்கப் பயிற்சி கொடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் அமைந்தது எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆயிரம் நலன்கள். இதையெல்லாம் எண்ணி எண்ணி மகிழலாமே ! ஏதேனும் ஒரு குறைபாட்டை நாமாக கற்பித்துக் கொண்டு அது இல்லையே என்று துன்பப்படுவதை விட்டுவிட வேண்டும்.

இந்த முறையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடமும் இந்தக் குறைபாடு களைந்து நிறைவை ஏற்படுத்திக்கொண்டு மனநிறைவாக வாழ்வதற்கு இறை உணர்வும், உயிர் உணர்வும் வேண்டும், அந்த உயிர் உணர்வைப் பெறுவதற்கு, இறை உணர்வை பெறுவதற்கு தவம் இருக்கிறது. அற உணர்வை பெறுவதற்கு நல்ல செயல்கள் செய்யச் செய்ய தானாகவே அது மலர்ந்துவிடும். அந்த முறையில் எப்பொழுதும் யாருக்கு என்ன நன்மை செய்யலாம் என்று அதைச் செய்யத் தயாராகும் முறையில் நீங்கள் வந்துவிட்டீர்களானால், அதுவே தான் எல்லாம் வல்ல இறைவனுக்குச் செய்ய வேண்டிய தொண்டு.

நேரடியாக நீங்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டும் என்றால் இறைவன் ஒவ்வொரு உள்ளத்திலும் இருந்து கொண்டு எங்கு தேவையோ அதை அங்கு போய் உதவி செய்து முடிக்கிற அளவுக்கு உதவி செய்ய வேண்டும். வாழ்க்கையில் மனநிறைவும் மகிழ்ச்சியும் பெறுவதற்கு இதற்கு ஈடான மார்க்கம் பிறிதொன்றும் இல்லை.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * *

“இன்பத்தை முறையுடன் அளவோடு அனுபவிக்கத்

துன்பமே பெரும்பாலும் தோன்றாது”.

“எண்ணியவெல்லாம் எண்ணிய படியேயாகும்

எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் அமைந்திடில்”.

“உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்

நினைப்பதும் நடப்பதும் நித்தியக் கடன்”.

“ஆதியெனும் பரம்பொருள்மெய் எழுச்சிபெற்று

அணுவென்ற உயிராகி அணுக்கள்கூடி

மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கேற்ப

மூலகங்கள் பலவாகி அவையிணைந்து

பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்

பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி

நீதிநெறி உணர்மாந்தராகி வாழும்


நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம்காண்போம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூன் 21 : எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம்

PREV      :  ஜூன் 19 : அறிவறிந்தோர் ஞாபகம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!