x

ஜூன் 10 : கடமையும் நீதியும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


கடமையும் நீதியும் :

“பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் வாழ்க்கைக்கு அவசியமான வசதிகள் அனைத்தையும் காலா காலத்தில் பெற்று அனுபவிக்க எல்லோருக்கும் உற்ற சுதந்திரமே உரிமை எனப்படுகின்றது.வாழ்க்கைத் தேவைகளைப் பெறவும், அளவு முறையோடு அனுபவிக்கவும், அறியாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் இயன்றவர்களும் தெரிந்தவர்களும் உதவி செய்ய வேண்டியது கடமை எனப்படுகின்றது.

இந்த உரிமையை அனுபவிப்பதிலும் கடமையை நிறைவேற்றுவதிலும் பிறர் உரிமையும் கடமையும் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொண்ட மனிதன் கண்ட ஒரு ஒழுக்க முறையே நீதி என்று மேன்மையாக கருதப்படுகின்றது. இந்த நீதியைப் பாதுகாப்பதற்கு சமுதாயம் அவ்வப்போது வகுக்கும் கட்டுப்பாடுகளே சட்டங்கள் என மதிக்கப்படுகின்றன.

அந்தச் சட்டங்களை மீறுவது குற்றமெனவும் குற்றமிழைப்பவர்களைத் தடுக்க திருத்த, தண்டிக்க, பாதுகாக்க எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் தண்டனை என்றும் வழங்கப்படுகின்றன.

இவையெல்லாம் வாழ்க்கைத் தத்துவத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும் சிந்தனையாளர் காணும் விளக்கமாகும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

 

கடமையை உணருவோம்:

“கல்லும் மரமும் மௌன நிலையில் நின்று

கடமை தவறாது பயனாகும்போது

சொல்லும் கருத்தும் உடைய மனிதன் ஏனோ

சுகங்கெட்டுச் சமூகத்தை மறக்க வேண்டும்;

அல்லும் பகலும் ஆசை ஒழிக்க வென்றே

ஆசைதனை பேராசையாக்கிக் கொண்டு

தொல்லை படும் அன்பர்களே சுருங்கச் சொல்வேன்

சுய நிலையை அறிய கருதவமே போதும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூன் 11 : தன்னிலை விளக்கம்


PREV      :  ஜூன் 09 : தற்சோதனை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!