x

ஜூன் 04 : உடல் இயக்கத்தில் உள்ள நுட்பம்

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.


உடல் இயக்கத்தில் உள்ள நுட்பம் :

“நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல் நலம் மன நலம் பாதுகாக்கப்பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும் உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு, சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும் வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும் அந்த இடத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும்.

அது இரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகிவிடும். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது. அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கெனவே அங்கு தொளை (puncture) ஆகி இருக்கிறது அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும்.

இந்த மின்குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவ காந்த சக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். ஈடு செய்யும் முயற்சியில் உயிராற்றல் தோல்வியடையும். உடலை நிர்வாகம் செய்வதற்குப் போதிய காந்த சக்தி, ஜீவகாந்த சக்தி, உற்பத்தி செய்ய முடியாமல் தோல்வியடையும். அந்தத் தோல்வியிலே தானே குறைவு பட்டு அது தன்னாலே ஏற்படக்கூடிய வெப்பத்தினாலே அதனுடைய மின்கலம் (battery) என்று சொல்லக்கூடிய விந்து நாளத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு அதைத் தாங்கி நிற்கக்கூடிய விந்துவையே அல்லது நாளத்தையே உடைத்துக் கொண்டு வெறியேறிய பின்னர் அதைத் தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்துவிடும். இதுவே மரணம். இதுதான் உடலியக்கத்தில் உள்ள ஒரு நுட்பம்.”

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

 

“உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்

எண்ணும் எண்ணங்கள் எங்கும் பாயும்”.

“நோயற்ற உடலை உடையவர்கள் தான் அமைதியாக மகிழ்ச்சியாக வாழ

முடியும், அவர்களுக்கு அறிவும் திறன்பட இயங்கும்”.

“அளவோடு உணவு உண்டால் உடலானது உணவைச் சீரணிக்கும், அதிகமாக

உண்டால் உணவானது உடலைச் சீரணித்துவிடும்!.”

“வாழவேண்டும் என்றெண்ணி உலக மீது

வந்ததில்லை வினைத் தொடராய்ப் பிறந்து விட்டோம்.

வாழவேண்டும் உலகில்ஆயுள் உள்ள மட்டும்


வாழ்ந்தோர்கள் அனுபவத்தைத் தொடர்ந்து பற்றி.

வாழவென்ற உரிமைஎல் லார்க்கு முண்டு,

வாழ்வோர்க்குச் சாதகமாய் வாழு மட்டும்.

வாழஉள்ளோர் அனைவருமே ஒன்று கூடி

வகுத்திடுவோம் ஒரு திட்டம் வளமாய் வாழ”.

“கருவமைப்பு, உணவுவகை, எண்ணம், செய்கை,

ககனத்தில் கோள்கள்நிலை, சந்தர்ப் பத்தால்

வரும்இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல் எல்லாம்

வாழும்உயிர் கட்குப்பல இரசாய னங்கள்

தரும்மாற்றம் தரமொக்க இன்பம் துன்பம்

தகுந்தஅள வாம். இதிலோர் சக்தி மீறிப்

பெருகிரத்தச் சுழல்தடுக்க நோயாய் மாறிப்

பின்னும்அதி கரித்துவிட மரணம் ஆகும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூன் 05 : இல்லற மலர்ச்சி

PREV      :  ஜூன் 03 : மெய்விளக்கம் (மெய்ஞானம் )

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!