வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
கட்டாயம் கற்க வேண்டிய தொழில்கள் :
1) விவசாயம்
2) நெசவு
3) சமையல்
4) வீடுகட்டல்
5) இயந்திரங்கள்
விஞ்ஞானக் கருவிகள் இவற்றின் நுட்பங்கள் அறிந்து அவற்றை இயக்குதல் உற்பத்தி செய்தல் ஆகிய ஐந்து அடிப்படைத் தொழில்களையும், ஒவ்வொருவரும் இருபது வயதுக்குள்ளாகக் கற்றுக் கொள்ளவும், மேலும் யார் யாருக்கு எந்தெந்த தொழிலில் கலைகளில் விருப்பம் இருக்குமோ, அவைகளைக் கற்றுத் தேறவும் உலக மக்கள் வாழ்க்கைத் தேவைகளை அறிந்து அவரவர்களின் திறமை சக்திகளைப் பயன்படுத்தப் புதிய முறையில் மனித குல வாழ்க்கையை இன்பமயமாக்கவும் தகுந்த முறையில் நாம் தொழில் கல்வி முறையை வகுக்க வேண்டும்.
உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் மனித வாழ்விற்கு இன்றியமையாத மேலே காட்டியுள்ள ஐந்து அடிப்படைத் தொழில்களையும் கட்டாயம் கற்கவும், அவரவர்களின் சிறப்புத் திறமை, ஆர்வம் இவைகளுக்கேற்ப குறிப்பான வேறு தொழில்கள் அல்லது கலைகளைக் கற்கவும் வசதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும், தொழில் கல்வி கற்கும் காலத்தில் மனோதத்துவம், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் என்ற ஐவகை வாழ்க்கைத் தத்துவத்தையும் வயதுக் கேற்றபடி அறிந்து, உயர் நோக்கச் செயல் திறமைகளுடையவர்களாக வேண்டும்.
மனித இனத்திற்கு வாழ்க்கை அறிவும், செயல் திறமையும் தான் செல்வமாகும். அந்தச் செல்வம் குழந்தைகளிடத்திலே சிறுவயது முதலே வளர வேண்டும். இதுவரையில் மனிதன் அடைந்துள்ள முன்னேற்றங்களின் இறுதிப் பயனாக இருக்க வேண்டியது உயர்தர முறையில் குழந்தைகளை வளர்ப்பதேயாகும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * *
“அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்,
மூன்று வகையிலும் அறிவு வறுமை நிலவுகிறது”.
“குழந்தைகளை நாள்தோறும் இரண்டு முறை ‘வாழ்க
வளமுடன்’ என்று வாழ்த்திவர நல்ல எதிர்காலம் குழந்தைகளுக்கு உண்டு”.
“ஒரு குழந்தையின் உற்பத்தியானது பெற்றோர்களுடைய உடல், உயிர், அறிவு
இவற்றின் தரத்திற்கு ஏற்றவாறு தான் அமையும்”.
அரசியல்வாதிகள்:
“அரசியலும் வாணிபமும் மக்கள் தம்மை
அடக்கிடவும் உறிஞ்சிடவும் ஏற்றதாச்சு;
அரசியலே இவ்விரண்டில் முதன்மை என்று
அறிந்திட்டார் சிலர், அதனால் திட்டமிட்டு
அரசியலைத் தந்திரத்தால் ஒழுங்கீனத்தால்
அடைய முயல்கின்றார்கள் போட்டியிட்டு;
அரசியலே முரடர்களின் சொத்தாய் மாறும்
அவலநிலையை முதலில் மாற்ற வேண்டும்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஜூன் 02 : வாழ்க்கை நலன்
PREV : மே 31 : அறிஞர் போதனைகள்