x

ஜனவரி 30 : நமது சகோதரர்கள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


நமது சகோதரர்கள்:

பெரும்பாலான நாடுகளில் சட்டங்களாலேயே குற்றங்கள் தோன்றுகின்றன. பெருகுகின்றன. அக்குற்றங்களைக் குறைக்க மேலும் சட்டங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. சட்டங்களே மனிதர் வாழ்வைப் பாழாக்கும் மாயக் கருவிகளாக இருக்கின்றன. சமுதாயமே தனி மனிதர் குற்றங்களைச் செய்யக் காரணமாகின்றது. எந்தச் சமுதாயம் தனி மனிதன் குற்றத்திற்குக் காரணமோ அதுவே தனி மனிதனை தண்டித்துக் கொண்டே இருக்கின்றனது.

நீதி எங்கே? சட்டம் எங்கே? குற்றம் எங்கே? தண்டனை எங்கே?
இந்த அலங்கோலத்திற்கு காரணம் என்ன? ஜனநாயகம் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் என்ற முத்திரையில் சுயநலமிகள் குழுவினர் குழுவினராக இணைந்து ஆட்சியை மாறிமாறிக் கைப்பற்றி மக்களை காயாடும் ஒரு சூதாட்டம் அன்றோ?
உத்தமர்கள் நிர்வாகத்தில் ஆட்சி நிலைபெற முடியாமலும், உத்தமர்கள் ஆட்சியிலே பங்கெடுத்துக் கொள்ள முடியாமலும் சுயநலமிகள் புரியும் தந்திரங்கள் எவ்வளவு ! இந்த நிலைமையில் இத்தகைய அரசியல்வாதிகளை அவர்கள் கொண்டுள்ள ஆட்சிபோதை என்ற மயக்கத்திலிருந்து மக்கள்தானே விடுவிக்க வேண்டும்?! ஆட்சி போதை என்ற வெள்ளம் அவர்களைத் தாண்டி அடித்துச் செல்லுகின்றது. வாருங்கள் சகோதரர்களே!..

ஓட்டுரிமை என்ற கருவியைச் சரியாகப் பயன்படுத்தி வெள்ளம் புறப்படும் இடமாகிய மதகை அடைத்து ஆட்சி போதை கொண்ட அரசியல்வாதிகளையும் அவர்களைத் தொடர்ந்து ஆபத்தில் சிக்கித் தவிக்கும் மக்களையும் நாமே தான் மீட்க வேண்டும்; ஏனெனில் அவர்கள் அனைவரும் மனித இனம்; நமது சகோதரர்கள்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

“வாழத் தெரியாதோர் பெரும்பாலோர் வாழ்நாட்டில் –

ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்;

கோழை கயவர் கொலைஞர் தடியர்கள்

ஏழை, நோயுற்றோர் எங்குமே காட்சியாம்”.

தினக்கடன்:

” உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்

நினைப்பதும் செய்வதும், நித்தியக்கடன்”.

” சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என்றென்றோ,

சர்வ தேசங்களிலும் மனிதர் கொண்ட

எந்தெந்தச் செயல்களோ, காரணமே இன்றி

இன்று பல சடங்குகளாய் வழக்கமாகி,

வந்துள்ளவைகளிலே பலநம் வாழ்வின்

வளமிழக்கும் நச்சாகி இருக்கக்கண்டோம்.

சிந்தித்தோர் முறை வகுப்போம், தேவையற்ற

தொல்லைதரும் சடங்குகளை ஒழித்துக்கட்ட.”

கடமை செய்வோம் :

“உடல் பலத்தோடறிவு பலம் ஒன்று சேர்த்து

உழைத்திடுவோம் முயற்சியுடன் விளைவைக் கொண்டு;


குடல் பசியைத் தீர்த்திடவோ மட்டுமல்ல,

குவித்திடலாம் பணம் என்ற குறிப்புமல்ல ;

கடல் சூழ்ந்த உலகில் வாழ் மனிதர் தேவை

கண் காதால் எண்ணத்தால் அறிவைத் தாக்கி,

சுடல் வேகம், நாம் ஏற்கும் தொழிலின் ஆர்வம்

சுக துக்க நிலையறிந்து கடமை செய்வோம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜனவரி 31 : அளவு முறை

PREV      :  ஜனவரி 29 : மனித நேயம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!