வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
மனித நேயம்:
இன்றைய வாழ்க்கை நிலையைக் கவனிக்கும்போது நாம் தெரிந்தோ தெரியாமலோ சில கருத்துக்களை நம் மனத்தில் பதிய வைத்துக் கொள்கிறோம். நட்புறவை வளர்க்கும் சில கருத்துக்களை ஏற்று வருகிறோம். அதோடு சில வெறுப்புணர்ச்சியூட்டும் கருத்துக்களையும் நாம் பதிவு செய்துகொண்டு வருகிறோம்.
மொத்தத்தில் பார்த்தால் உலகில் நட்புணர்ச்சியைவிட வெறுப்புணர்ச்சி தான் அதிகமாகக் காணப்படுகிறது. கட்சிப்பற்று காரணமாக சாதிப்பற்று காரணமாக, நாட்டுப்பற்று, குடும்பப்பற்று காரணமாகவும் வெறுப்புணர்ச்சியே வளர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இந்த வெறுப்புணர்ச்சி பெரிதும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே எழக் காண்கிறது.
ஒருவர் செய்கிற காரியமோ, பேசுகிறபேச்சோ நமக்குப் பிடிக்காத காரணத்தால் கோபம் எழும்போதே அது மூலையிலுள்ள சிற்றறைகளைத் தாக்கி வெறுப்புணர்ச்சியை பதிவு செய்துவிடுகிறது. கணவன் மனைவி உறவில் இவ்வித வெறுப்புணர்வு ஏற்பட்டுவிடுமானால், அந்த குடும்பத்தில் ஒருபோதும் அமைதி இருக்காது.
ஒருத்தரை ஒருவர் சபித்துக் கொள்வதாகத்தான் இருக்கும். ஆனால் இதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. இதனால் ஒருத்தருக்கொருத்தர் தமக்கே தம் குடும்பத்திற்கே தீமை விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.
மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும். மதித்து நடக்க வேண்டும். கூடுமானவரை ஒருவரை ஒருவர் எப்போதும் வாழ்க வாழ்க என்று வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நேசம் வளரும், வெறுப்பு நீங்கும் நன்மை ஏற்படும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“நம்மை நோகடிப்பவர்களை நாம் நேசிக்கலாம் –
ஆனால் நம்மை நேசிப்பவர்களை
நாம் ஒரு போதும் நோகடிக்கக்கூடாது” – மகரிஷி.
ஆறுகுணச் சீரமைப்பின் நல்விளைவு:-
“பேராசை, கவலை, சினம், அழுக்காறு விட்டால்
பேரறிவாய் விரிவடையும் மனது தரம்மாறி
ஓராசை உளத்திலெழ ஒத்த நுட்பத்தோடு
உடலறிவு சமுதாயம் இயற்கை நான்கின் இனிமை
சீராகக் காத்து ஆற்றும் சிறப்பு இயல்பாகும்
சிந்தனையின் உயர்வினிலே விழிப்புடனே வாழ
யாராசையும் இதனால் அறிவறிய ஓங்கும்
எப்போதும் அமைதி இன்பம் நிறைவு பெற்று வாழ்வோம்.”
பழுத்த ஞானம்:-
“திறந்துகொள் தான் தனது என்று சொல்லும்
சிற்றறையை, வெளியேவா, அகன்று நோக்கி
பறந்துலவு உலக சமுதாயத்தின் பரப்பகத்தில்,
பற்று அறும் கடமையினால் பழுக்கும் ஞானம்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஜனவரி 30 : நமது சகோதரர்கள்
PREV : ஜனவரி 28 : மனிதனின் சிறப்பு