x

ஜனவரி 28 : மனிதனின் சிறப்பு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


மனிதனின் சிறப்பு:

“உலகிலுள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா உயிர்களிலும் சிறந்த மேலான ஒரு இயக்கநிலை மனித உருவம். எல்லாம் வல்ல இறைநிலையை முழுமையாக எடுத்துக்காட்டும், பிரதிபலிக்கும் கண்ணாடி மனிதனே.

உடலுக்குள் உயிர், உயிருக்குள் அறிவு, அறிவுக்குள் அருட்பேராற்றலின் இயற்கை [மெய்ப்பொருள்]. இவ்வாறு ஒன்றில் ஒன்றாக நிலைகொண்டு மனித உரு சிறப்பாக, வியத்தகு முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

உடல் குறிப்பிட்ட அளவு பருமனால் எல்லை உடையது. உயிரானது நுண்ணியக்க மூலக்கூறான விண் எனும் நுண்துகள்கள் கோடிக்கணக்கில் ஒன்றிணைந்து ஒரு தொகுப்பாக இயங்கும் ஆற்றல். இந்த உயிரானது உடலுக்குள் சுருங்கவும், உடலுக்குப் புறத்தே தக்க அளவு விரியவும் கூடியது.

அறிவு என்பது உயிரை மையமாகக் கொண்ட மெய்ப்பொருள். உடல் மூலம் ஆற்றிய வினைகளினால் பெற்ற அனுபவம், சிந்தனை, கற்பனை இவற்றிற்கேற்ப விரிந்தும், சுருங்கியும் செயல்புரியும் ஆற்றலுடையது. அறிவில் அடங்கியுள்ள இரகசியங்கள் எண்ணி அறிய முடியாதவை. எல்லாம் வல்ல முழுமுதற் பொருளான மெய்ப்பொருள் உயிராற்றலை மையமாகக் கொண்டு தனது அசைவினாலும், உணர்வாலும் ஆற்றிய வினைப்பதிவுகள் அனைத்தும் அடக்கம் பெற்ற கருவூலம் அறிவு ஆகும்.

இது உயிர்த்துகளின் மையத்தில் தொடங்கி உயிர்த்துகள் தற்சுழற்சியால் விளையும் ஜீவகாந்த சக்தி மூலம் உடல் வரையிலும் மேலும் உடலுக்கு வெளியே புலன்கள் மூலம் உணரும் பொருட்கள் வரையிலும் யூகத்தால் பேரியக்க மண்டலம், அதற்கப்பால் நிலைத்த சுத்தவெளி எனக் கருதப்படும் மெய்ப்பொருள் வரையிலும் விரிந்து சுருங்கும் இயல்புடையது.

எல்லாம் வல்ல மெய்ப்பொருளே சுத்தவெளியாகவும், மெய்ப்பொருளாகவும் விண் முதல் மண் வரையிலான பஞ்ச பூதங்களின் இணைப்பால் ஆகிய பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் இயக்க ஒழுங்காகவும், உயிர்களிடத்தில் புலனுணர்வாகவும், மனிதனிடத்தில் எல்லாமாக இருக்கும், தன் முழுமையை உணரும் பேரறிவாகவும் இருக்கிறது. இந்த நான்கு தத்துவங்களும் ஒன்றிணைந்த மாபெரும் வல்லமையுடைய அறிவிலும், செயலிலும் சிறந்ததோர் உருவம் மனிதன்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

உண்மை நிலை:

“எல்லையற்ற பரவெளியாய்

எண்ணத்தை விரித்தகன்று

இந்நிலையில் நிற்க நிற்க

இல்லையென்று புலன் உணரும்

இருப்பு நிலையறி வெய்தும்

இது உண்மை உண்மை.”

பிரம்மம் :

“நான் என்ற பிரம்மத்தை அறிந்தேன் அஃது


நினைவதனின் முடிவாகும், மூலமாகும்

சூனியமே! தோற்றமெலாம் அதிலிருந்தே!

சுத்த வெளி ! மௌனமது! உவமை இல்லை!

ஊன் உருவில் ஓடும் உயிர்ச்சுழற்சி வேகம்

உற்பத்தி செய்கின்ற மின் சாரத்தில்

தோன்றுகின்ற அலை இயக்கம் அறிவு ஆகும்.

சுயநிலையில் தியானித்து அறிதல் வேண்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜனவரி 29 : மனித நேயம்

PREV      : ஜனவரி 27 : சாந்தம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!