வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
மெய்ஞ்ஞான வாயில்:
புருவமையத்தை “ஆக்கினைச் சக்கரம்” என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் ஒடுக்கிப் பழக, உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும். உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்க்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது.
உயிரின் இத்தகைய மயக்க நிலை தான் ‘மாயை’ எனப்படும். மயக்க நிலையில் உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகளே, பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்னும் ஆறுகுணங்களாகும்.
ஆறுகுண வயப்பட்டு மக்கள் செலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம். ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகிறது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.
புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது, தனது ஆற்றலை- அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக மாற்றி, அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது, தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவுபெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும்.
தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும், தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டுச் சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவிற்குத் திறமை பெருகும். மெய்ஞ்ஞானம் என்ற அருட்கோயிளுக்குள் புகும் வாயில், ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப்பெற்ற குண்டலினி சக்தியின் இயக்கவிறைவு நாளுக்குநாள் கூடிக்கொண்டேயிருக்கும்; உடல் நலம், மன நலம், ஓங்கும்; முகம் அழகு பெறும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
தொட்டுக் காட்டல் :
“குருவினது விரல்பட்ட உடனே ஆங்கோர்
குறுகுறுப்பும் சிறு உணர்வும் அறிவிற் கெட்டும்
ஒருமையுடன் உற்றுற்று உணர்ந்து வந்தால்
உள் நாட்டமே உனக்குப் பழக்கமாகும்.
பெருகிவரும் பேரின்ப எல்லை கண்டு
பிறப்பிறப்பு எல்லைக்கு அப்பால் உள்ள
நிருவிகற்ப நிலைகண்டால், எங்கும் என்றும்
நீயனைத்துமாகி நிற்கும் தன்மை காண்பாய்.”
மாய காந்த விளைவுகளே இன்பதுன்பம் :
“காந்த நிலை உணர்ந்திடில் கடவுள் மனம் அதனிலே
கண்டிடலாம் அதன் மாயத் திருநடனக் காட்சியாய்,
மாந்தருக்குள் ஊறு ஓசை மணம் ஒளிசுவை மனம்
மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்;
சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட
சந்தேகம் சிக்கலின்றிச் சாட்சி கூறும் உன் உளம்,
வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொது இது
விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஜனவரி 26 : ஓர் உலக ஆட்சி
PREV : ஜனவரி 24 : மனம் ஒரு பொக்கிஷம்