வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
மனம் ஒரு பொக்கிஷம் :
ஒவ்வொரு செயலுக்கும் ஓர் விளைவுண்டு. அந்த விளைவிலிருந்து யாருமே தப்ப முடியாது. ஒவ்வொருவரும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உயிருக்கோ தீங்கு நேராவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அமைதியும் இன்பமும் ஏற்படும்.
அறிவு வளர்ச்சிக்கும் வழி ஏற்படும். இன்றேல் அமைதி குன்றி வளர்ச்சி தடையுறும். அவரவர் செய்யும் தவறுகள் தான் மதவாதிகளால் பாபம் என்றும், சிந்தனையாளர்களால் தவறு என்றும், அரசியல்வாதிகளால் குற்றம் என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்றுமே ஒரே பொருளைக் குறிப்பதுதான்.
நாம் ஒரு முறை ஒரு செயலை செய்துவிட்டால், அது நமது உடலுறுப்புக்களில் பதிந்து மீண்டும் அதையே செய்யத் தயாராகிவிடும். இந்தப் பதிவு, எண்ண அழுத்தமாக மூளையிலும் பதிந்துவிடுகிறது. அதுவுமின்றி, சந்ததித் தொடர்புக்கு காரணமாக உயிர்வித்திலும் அது பதிந்து விடும். ஆகவே தான், தீமையைத் தவிர்த்து நல்லதே செய்ய நாம் பழகிக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இதற்கு தான் ஒழுக்கம் என்று பெயர்.
பிறர்க்கு எவ்வகையிலும் தீமை ஏற்படாதபடி எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு வாழ்வது தான் ஒழுக்க வாழ்வு ஆகும். மற்ற எல்லாம் இழுக்கான வாழ்வாகிய துன்பத்தையே தான் கொடுக்கும். இதனால் காரண காரிய விளைவு அறிந்து இன்பம் தரும் நற்செயல்களிலேயே ஒருவன் ஈடுபடவேண்டுவது அவசியமாகிறது.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும்,
பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்”
ஆன்மீகப் பொலிவு :
“அறிவறியக் கருதவத்தை அனைத்துலகுக் களித்து
அல்லல்தரும் இருவினைகள் பதிவுகளை மாற்றும்
நெறிவிளக்க அகத்தாய்வு நேர்முறையும் தந்தேன்,
நிலையான பயன் காண மெய்விளக்க மன்றம்
சிறியவர்க்கும் பெரியவர்க்கும் சிந்தனையைத் தூண்டிச்
சீர்தூக்கி விளைவறிந்து விழிப்புடனே ஆய்ந்து
பொறிகள்தமை ஆளுமுறை செயலளவில் காண
புத்துலகு ஆன்மிகப் பொலிவோடுஒளி வீசும்.”
உயிர் ஒடுங்கினால் தெய்வம் :
“உயிர் என்ற நுண் பொருளின் கூட்டியக்கம்
உலகம், உடல், தோற்றங்கள், எத்தோற்றத்தும்
உயிருக்குயிராய் அகம் என்ற அறிவாய் ஆற்றும்
உட்பொருளே மெய்ப்பொருளாம் தெய்வம் ஈதே;
உயிரினிலே மனம் அடங்கும் உளப்பயிற்சி
உண்மைநிலை உணர்த்தவல்ல அகத்தவம் ஆகும்
உயிர்த்துகளே அகம் இயங்கும் நிலையமாகும்
உயிர்படர்ந்தால் உலகமாம் ஒடுங்கத் தெய்வம்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஜனவரி 25 : மெய்ஞ்ஞான வாயில்
PREV : ஜனவரி 23 : செயலின் பிரிவுகள்