வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
அறிஞர்களின் அனுபவங்கள் :
“அறிஞர்கள், கவிஞர்கள், தொழில் நிபுணர்கள், இவர்களின் வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் எண்ணிறந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நடந்தேறுகின்றன.
உலக மக்களுக்கு அவர்களது அனுபவங்களை பேச்சாலும், எழுத்தாலும், கவியாலும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார்கள். அவர்கள் அந்தத் துறையில் அந்தந்த நிகழ்ச்சியில் அந்தந்தச் சமயத்தில் தாங்கள் அடைந்த இன்பங்களையும், துன்பங்களையும் உலக மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்கள்.
அவர்களின் இத்தகைய முயற்சியால் அவர்கள் அடைந்த இன்பத்தை ஒருவர் அறிந்து கொண்டது முதல் அதை நினைக்குந்தோறும் ஓரளவு இன்பமும், அதே இன்பத்தைத் தானும் வாழ்வில் பெற வேண்டும் என்ற முயற்சியும், அதைத் தொடர்ந்து, முயற்சிக்கேற்ற பயனையும் அடைய முடிகிறது.
அவர்கள் அடைந்த துன்பத்தை ஒருவர் அறிந்து கொள்வதனால் அது போன்ற துன்பம் வாழ்வில் தனக்கு ஏற்படாமல் விழிப்பாக இருப்பதற்கும் அப்படி ஏதேனும் சூழ்நிலை சந்தர்ப்ப நிர்பந்தங்களினால் ஏற்பட்டுவிட்டாலும் அதைச் சமாளிக்கவும், குறைத்துக் கொள்ளவும் ஏற்ற அளவில் திறமை, தகைமை, பொறுமை இவைகளை அவர்கள் பெற்று வருகிறார்கள்.
ஆகவே அறிஞர்களின், அனுபவசாலிகளின் – கருத்துக்களும், சரித்திரங்களும் அவற்றைக் கற்கும் எல்லோருக்கும் பலவிதத்திலும் நற்பயனையே தருகின்றன.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
“அருள்துறை வளர்ச்சியின்றி, உலகில் அமைதி அமையாது.
அறநெறியும் இறையுணர்வும் இன்றி அருள்துறை வளர்ச்சி அமையாது.”
“தவறுகளைச் செய்துகொண்டே ஒருவர் தர்மத்தைப் போதிக்க, அதனைக்
கேட்ப்போரும் தர்மத்தைப் பேசிக்கொண்டே துணிந்து தவறுகளைச் செய்து
கொண்டிருப்பர்.”
“அறிவை அறிய ஆர்வம் எழுந்து விட்டால் அது தன்னை
அறிந்து முடிக்கும் வரையில் அமைதி பெறாது”.
“கற்பனையில் நாடகங்கள் கதைகள் வேண்டாம்.
காமத்தீ மூட்டுகின்ற கூத்து வேண்டாம்.
அற்புதமாம் பிரபஞ்சத் தியங்குகின்ற
அணுமுதல் அண்டங்களின் அமைப்பியக்கம்,
உற்பத்தி, மறைவு எனும் உயர் விஞ்ஞான
உண்மைகளை அறிஞர்பலர் எடுத்துச் சொல்வார்.
சிற்பிகளாய்ச் சிந்தைஉடல் பலத்தைக் கொண்டு
செகவாழ்வில் அன்புஇன்பம் தூய்மை காண்போம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஜனவரி 22 : அன்பர்களுக்கு
PREV : ஜனவரி 20 : மனம், உயிர், தெய்வநிலை