x

ஜனவரி 19 : சாதனை தான் பயன் தரும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


சாதனை தான் பயன் தரும்:

அறிவின் வளர்ச்சிக்கு மூன்று படிகள் உள்ளன அவை
1) நம்பிக்கை 2) விளக்கம் 3) முழுமைப்பேறு (Faith, Understanding and Realisation ).

உடலைக் காக்கும் நெறியிலும் மூன்று ஒழுங்காற்றல் வேண்டும். அவை
1) ஒழுக்கம் 2) கடமை 3) ஈகை (Morality, Duty and charity).
இத்தகைய தெளிந்த நிலையில் மனிதன் வாழ்ந்து முழுமை பெற வேண்டுமெனில் கீழ்க்கண்ட ஏழு விதிகளை நன்கு உணர்ந்து ஆற்ற வேண்டும்.

அவை:
1) வாழ்வின் நோக்கம், தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2) தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் கணித்துக் கொள்ள வேண்டும்.

3) இயற்கையின் ஒழுங்கமைப்பையும் அதன் ஆற்றலின் விளைவான தவறற்ற காரண-விளைவு விதியையும் உணர்ந்து கொண்டும் மதித்தும் நடக்க வேண்டும்.

4)வாழ வேண்டிய முறையையும் ஆற்ற வேண்டிய செயல்களையும் வரிசையாகத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.

5) இத்தகைய வாழ்வுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள உடல் வலிமையையும், திறமையையும், அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். இவற்றிற்கு முறையான உடல் பயிற்சி, உளப்பயிற்சி, சிந்தனை இவற்றைப் பழகிக் கொள்ள வேண்டும்.

6) விழிப்போடும், விடாமுயர்சியோடும் எண்ணம், சொல், செயல் இவற்றை பயன்படுத்த வேண்டும்.

7) அவ்வப்போது ஏற்படும் தவறுகளை அகத்தாய்வு ( Introspection), செயல் திருத்தம் என்ற இரண்டு வழிகளாலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த ஏழு விதிகளை நன்குணர்ந்து மனிதன் அறிவில் வளர்ச்சி பெற வேண்டும்; உடலையும் நன்கு காத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய வாழ்வின் மூலமே மனிதன் பிறர்க்குப் பாரமாக இல்லாமலும், பிறருக்கு உதவியாகவும் இருந்து கொண்டே தானும் நிறைவோடும், மகிழ்ச்சியோடும் வாழலாம். முயல்க! சாதனை தான் பயன்தரும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

“ஆக்கத் துறையில் அறிவைச் செலுத்து

ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்”.

நல்லோரைப் பின்பற்று:

“சீர் திருத்த நோக்குடையாய்

சிந்தனைசெய்! புவிவாழ்வை

யார் திருத்தம் செய்துள்ளார்

இதுவரையில்? – பார்திருந்த

ஆராய்ச்சி, நல்லொழுக்கம்

அன்பு செயல், இவையன்றோ

வேராச்சு? அதனால் நீ

விவேகமுடன் அவ்வழிச்செல்.”
நிறை உணர்வு:

“உருவெடுத்த காரணமும் காரியமும் முடிவும்

உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து


திருவருளே அவ்வப்போ உணர்த்த உணர்ந்திட்டேன்;

செய்த வினைப் பதிவுகளைத் தூய்மை செய்துகொண்டேன்.

கருத்தொடராய்ப் பின் பிறவி இல்லை இனியில்லை

கர்மவினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும்

அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும்

அந்தப் பெரு நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜனவரி 20 : மனம், உயிர், தெய்வநிலை

PREV      :  ஜனவரி 18 : மகளிரும் ஆன்மீகமும்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!