x

ஜனவரி 18 : மகளிரும் ஆன்மீகமும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


மகளிரும் ஆன்மீகமும்:

வாழ்க்கையானது ஆண், பெண் என்ற இருவரும் இணைந்து தான் நடைபெறுகின்றது. இந்த உலகில் எல்லோருக்குமே இந்த இரண்டுபேர் கூட்டுறவில் தான் பிறவி தோன்றுகிறது. என்றாலும் கூட ஒரு சில காரணங்களால் உலகெங்குமே ஆண்கள் மேலோங்கவும் பெண்கள் கீழாக மதிக்கப்பெறவும் ஒரு சந்தர்ப்பம் இருந்தது.

காலத்தால் அந்தச் சந்தர்ப்பம் போனபிறகு கூட வழக்கத்தை ஒட்டி, பழக்கத்தை ஒட்டி அதே ஆதிக்க மனப்பான்மை ஆண்களுக்கு ஏற்பட்டுத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது ஒரு சமுதாயம் திருந்த வேண்டுமானால் இந்தக் குறைபாடுகள் நீங்கத்தான் வேண்டும்.

அந்தக் குறைபாடுகளை நீக்கிக் கொள்வதற்கு ஒரு சாரார் மட்டும் – ஆண்கள் மட்டுமோ, அல்லது பெண்கள் மட்டுமோ – முயன்றால் போதாது. இரண்டு பேர்களுமே அந்தக் குறைபாடுகளை உணர வேண்டும்; அவற்றை முறையாகப் போக்கிக் கொள்கின்ற விருப்பம் அவர்களுக்கு வர வேண்டும்.

ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டீர்களானால் அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும், அந்தக் குடும்பத்திலே நல்ல குழந்தை பிறக்க வேண்டும், அந்தக் குழந்தை அறிவுடையவனாக, சமுதாயத்தில் பொறுப்புள்ள பிரஜையாக வாழ வேண்டும். குடும்பத்திற்கும் நல்ல உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகிறோம்.

அப்படியானால் அந்தக் குழந்தைப்பேறுக்கு உரிய ஆண், பெண் இருவருமே சமஉரிமை, அறிவிலே திறமை, நுட்பம் இவை நிறைந்தவர்கலாகத்தான் இருக்க வேண்டும். ஆண்களுக்கு மாத்திரம் சில கல்வி வசதி, செல்வ வசதி, இன்னும் அதிகார வசதி எல்லாமே வைத்துக் கொண்டு பெண்களுக்கு அவை மறுக்கப்பட்டால் என்ன ஆகும்?.

ஒரு புறம் அறிவிலே அல்லது செல்வத்திலே, மற்ற எல்லாவற்றிலும் எழுச்சி, மற்றொரு புறத்திலே எல்லாவற்றிலும் தாழ்ச்சி. அங்கே பிறக்கக்கூடிய குழந்தைகூட அப்படித்தான் இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வினை நீக்கிக் கொள்ள வேண்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

“உண்மையோடும் நேர்மையோடும் உள்ளோர்க்குத் துன்பங்கள்

உண்டாகா எனும் கருத்து ஒரு மயக்கக் கற்பனையே.

உண்மை ஒளியாய் வாழ்ந்த உலக அறிஞர் பலர்க்கு

உண்டான தொல்லைகளை யூகித்து உணர்ந்திடுவீர் !. “

வாழ்த்த மனம் நிறையும் :

“மனைவியவள் தனைமதிக்க வில்லையென்ற குறையால்

மனம்வருந்தும் கணவருக்கும், மணந்தவர் பொறுப்பாய்

எனைமதிக்க வில்லையென்று ஏங்கும் பெண்களுக்கும்


இன்பவாழ்வு மலர்வதற்கு ஏற்றவழி சொல்வேன்;

நினைவு கூர்ந்துன் வாழ்க்கைத்துணை இதுவரை உங்கட்கு

நிறை மனத்தோடன்பு கொண்டு செய்தவெல்லாம் பாரீர்,

உனைமதித்து ஆற்றியுள்ள இனியசெயல் அனைத்தும்

உள்நினைந்து நன்றிகூறி வாழ்த்த மனம் நிறையும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜனவரி 19 : சாதனை தான் பயன் தரும்

PREV      :  ஜனவரி 17 : குழந்தை வளர்ப்பு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!