வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
பேரின்ப வெள்ளம்:
அன்பும் கருணையும் உடைய தெய்வ நிலையானது விண் முதல் ஆறறிவாகி, மனித மனத்தின் மூலம் தனது பரிணாமப் பயணச் சரித்திரத்தை உள்ளுணர்வாகக் காட்டிய பேரறிவிற்கு நன்றி கூறுமிடத்து, அத்தகு உள்ளுணர்வு அடைந்த நம்மையே இறைநிலைக்கு அர்ப்பணம் செய்து மகிழ்ச்சியடைவோம்.
மேலும் உலக வாழ்வில் உயிரினங்களின் உற்பத்திக்கு ஏற்ற வகையில் பெண்ணினத்தை வடிவமைத்து எல்லா உயிர்வகைக்கும் அன்பு காட்டி, கருணையை வழங்கிக் காக்கும் அந்தப் பேராதார இறைநிலைக்கு நன்றி கூறி மன நிறைவு பெறுவோம்.
எல்லா உயிர் வகைகட்கும் உணவாகவும் மற்றும் வாழ்க்கை வசதிகளாகவும், சிக்கலில்லாமலும், வரையறை இன்றியும், தங்களது வளர்ச்சியை அர்ப்பணித்து உலகைக் காத்து வருகின்றன தாவர இனங்கள்.
அத்தகு தாவர வர்க்கங்களை அன்போடும் கருணையோடும் உருவாக்கி, இதர உயிரினங்களுக்கு அளித்துள்ள பேரன்புக்காகவும், கருணைக்காகவும் இறைநிலைக்கு நன்றி கூறி, அப்பெருமகிழ்ச்சியான பேரின்ப வெள்ளத்தில் திளைப்போம்.
ஒவ்வொரு நாளையும் இறைநிலையின் அன்பின் ஊற்றுப் பெருக்க நன்னாளாகவே கருதி என்றும் கொண்டாடுவோம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
பிரம்மம்:
“நான் என்ற பிரம்மத்தை அறிந்தேன், அது
நினைவதனின் முடிவாகும், மூலமாகும்;
சூனியமே! தோற்றமெலாம் அதிலிருந்தே!
சுத்த வெளி! மௌனமது! உவமை இல்லை!
ஊன் உருவில் ஓடும் உயிர்ச்சுழற்சி வேகம்
உற்பத்தி செய்கின்ற மின் சாரத்தில்
தோன்றுகின்ற அலை இயக்கம் அறிவு ஆகும்.
சுயநிலையில் தியானித்து அறிதல் வேண்டும்.”
“பொங்கிடுவோம் உயிர் உணர்ந்து
புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம் நாடனைத்தும்
பொறுப்பாட்சி வளம் கண்டு
பொங்கிடுவோம் சமுதாயப்
பொருள் துறையில் நிறைவு கண்டு
பொங்கிடுவோம் மக்கள் குலம்
போர் ஒழித்து அமைதி பெற.”
“பயிர் விளைந்த மகிழ்ச்சியிலே உழவர் பொங்க;
பங்கீடு பெற்றவர்கள் பயனால் பொங்க;
உயிரறிந்த உவப்பினில் யான் உளத்தில் பொங்க;
உலகெங்கும் வளம் பெறவே வாழ்த்து கின்றேன்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஜனவரி 15 : மனநிறைவு
PREV : ஜனவரி 13 : குடும்ப அமைதியே ஞானத்திற்கு வழி