x

ஜனவரி 11 : சிக்கலும் தீர்வும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


சிக்கலும் தீர்வும்:

வாழ்க்கைச் சிக்கல்கள் பல காரணங்களால் விளைகின்றன. பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைபாடுகள் தான் வாழ்க்கைச் சிக்கல்கள் விளையக் காரணமாகின்றன. எப்படி எனப்
பார்க்கலாம்.

அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி தெரிவதில்லை. செயல் விளைவுத் தத்துவம் புரிவதில்லை. தவறு செய்தால் இன்றோ, நாளையோ, அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை.

இத்தகைய அறியாமையால் செய்த தவறுகளின் காரணமாகப் பெருக்கிக் கொள்ளும் துன்பங்களே வியாதியாகவும் வாழ்க்கைச் சிக்கல்களாகவும் நம்முன் எழுந்து நிற்கின்றன.

அறிவின் குறைபாட்டால் சமுதாய ஒழுங்கமைப்பு விதிகள் புரிவதில்லை. பலர் இணைந்த கூட்டுறவு வாழ்வு எனும் சமுதாயத்தின் பராமரிப்புக்கும், காப்புக்கும், மேம்பாட்டுக்குமான விதிமுறைகளை அறியாமல் அல்லது அவமதித்து, அதன் விளைவாகச் சந்திக்கும் துன்பங்கள் தாம் வாழ்க்கைச் சிக்கல்களாக மாறுகின்றன.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உருளும் வாழ்வு எனும் காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கும் ‘நான்’ யார் என்று தெரிவதில்லை. என் மூலமென்ன? என் முடிவென்ன? என்பதை விளங்கிக் கொள்வதில்லை. தன்னிலை விளக்கம் பெறவேண்டும் என்று கூடத் தெரிவதில்லை.

அதன் விளைவாக, வாழ்வின், பிறவியின் நோக்கமாகிய வீடுபேறு என்ற உன்னதமான லட்சியத்திற்கு இசைவான வகையில் வாழும் முறையை அமைத்துக் கொள்ளாமல், அந்த லட்சியத்திற்கு இடையூறாக, எதிரிடையாக என்னென்ன வழிகள் உண்டோ அப்படியெல்லாம் வாழ்வதால் அந்த முரண்பாடே வாழ்க்கைச் சிக்கல்களாக முளைக்கிறது. தன்னிலை விளக்கம் பெற்று லட்சிய வாழ்வு வாழ்வோம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

“சிக்கல்களை சந்திக்க போதிய பலமில்லாத

மனநிலையைக் ‘கவலை’ என்கிறோம்.”

“முறுக்கேறிய பஞ்சு நூலாகி வலுவடைவது போல

சிந்தனையாலும் உழைப்பாலும் பண்பட்ட

உடலும் உள்ளமும் துன்பங்களைத் தாங்க

வல்லமையுடையவை ஆகின்றன.”

மனத்தூய்மை வினைத்தூய்மை :

“மனத்தூய்மை வினைத் தூய்மை மனிதன் வாழ்வில்

மகிழ்ச்சி, இனிமை, நிறைவு, அமைதி நல்கும்.

மனம் உயர நேர்மைவழி அகத்தவம் ஆம்.


மற்றும் தன்வினை உயர அறமே ஆகும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   ஜனவரி 12 : காயகல்பக் கலை

PREV      :  ஜனவரி 10 : சினம் ஒரு சங்கிலி

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!