வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!!
உள்ளத்தின் சோதனை:
மனதின் நிலையே வாழ்வின் வளம் ஆகும். நிலத்தில் ஊன்றும் வித்து எதுவென்றாலும் நீர் தெளித்து வந்தால் அது முளைத்துப் பயிராகி அதனதன் தன்மைக்கேற்ற பயன் தருகின்றது.
அது போன்றே உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்களும் நாளுக்கு நாள் உறுதி பெற்று, வாழ்வின் பயனாக விளைந்து விடும். ஆகவே, நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்தவிதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஊன்றவோ, வளரவிடவோ கூடாது.
கோபம், வஞ்சம், பொறாமை, வெறுப்புணர்ச்சி, பேராசை, ஒழுக்கம் மீறிய காம நோக்கம், தற்பெருமை, அவமதிப்பு, அவசியமற்ற பயம், அதிகாரப் போதை என்ற பத்து வகையும் நமது உள்ளத்தில் நிறைபெறவொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து, களைந்து கொண்டே இருக்க வேண்டும்.
இவை வளர்ந்தால் நல்லெண்ணம் வருவதற்கோ, நிலைப்பதற்கோ, இடமில்லாத துன்பம் தரும் காடாக நமது உள்ளம் மாறி விடும். உடல் காந்த சக்தியைப் பாழாக்கிக் கொண்டே இருக்கும் ஓட்டைகளாக, இக்கெட்ட குணங்கள் மாறிவிடும்.
காலையிலும், மாலையிலும் 10 நிமிட நேரம் அமைதியாக உட்கார்ந்து உள்ளத்தைச் சோதனையிடும் பணியைத் தொடங்குங்கள். 30 நாட்களில் கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டு மகிழுங்கள்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
“முட்டைக்குள் அமைந்த கரு உடலாலும் உயிராலும் வளர்ச்சி பெற்றால்
மூடிய ஓடுடைந்துவிடும் குஞ்சு வெளிஉலகைக் கண்டின்பம் துய்க்கும்;
திட்டமிட்டு அறம் ஆற்றித் தூய்மை அறிவில் உடலில் பெற்றுவிட்டால்
தீரும்வினை புலன்மயக்கம் தாண்டிடலாம் தீய வினைப்பதிவு எல்லாம்
விட்டுவிடும் விளைவாக வீடுபேறெனும் அறிவையறிதல் கிட்டும் ;
வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது,
தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளே பேராற்றல் புதையல் கண்டோர்
தக்கவழி அருட்குருவின் தாள் பணிந்து தவம் பயின்று தனை உணர்தல்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
NEXT : ஜனவரி 07 : எண்ணத்தின் ஆற்றல்
PREV : ஜனவரி 05 : தியானமும் எண்ணமும்