வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
தியானமும் எண்ணமும்:
மனதை நிறுத்தி வைப்பதென்பது இயலாத ஒன்று. ஆகவே தியானப் பயிற்சியாளரை அவ்வாறு செய்யச் சொல்வது எந்த பயனையுமளிக்காது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மன இயக்கத்தைச் சற்று ஒழுங்கு படுத்துதல் தான். அவ்வாறு ஒழுங்குபடுத்துதல் என்பது நம் தவமுறையிலும் அகத்தாய்வின் மூலமும் நிச்சயம் சாத்தியமான ஒன்றுதான்.
சாதாரணமாக மனம் ஓர் இடத்தில் நிலைப்பதில்லை. ஏனெனில் உணர்ச்சிவயப்பட்டும், வேகமாகவும் செயல்பட்டே அது பழகி விட்டிருக்கிறது. உதாரணமாக, மழை நீரானது புவி ஈர்ப்பு விசைக்கேற்றபடித் தனது பாதையை அமைத்துக் கொண்டு ஓடும். மீண்டும் மழைவரும் போது, அதே பாதையின் வழியாகத் தானே ஓடும் அது வேறு திசையில் செல்ல முயற்சிப்பதில்லை. பழைய அதே பாதையிலேயே செல்வது அதனுடைய தன்மை.
மனமும் அது போன்று தான் செயல்படுகிறது. ஆனால், தியானம் என்பதோ, அதைப் பயின்ற பிறகு மனதை பழைய வழியில் செல்லாதிருக்குமாறு வைத்துப் பழக்குவதே ஆகும். இந்த திறனில் வெற்றி கிட்டச் சில காலம் ஆகும். ஆனால் இடையில் மனந்தளராமலும், முயற்ச்சியை கைவிடாமலும் இருக்க வேண்டும்.
மழைநீரின் வழியை மாற்ற வேண்டுமானால், அதன் ஓட்டத்திற்கு மாற்று வழி ஒன்று தயார் செய்ய வேண்டும். நீர் முழுவதும் அதில் திரும்புமாறு செய்ய வேண்டும். அதே போல் தொடர்ந்து தியானம் செய்யும் போது, (தாங்கள் எதிபார்க்கும் காலத்திற்கு முன்பாகவே கூட) மனம் நுண்ணிய நிலையை அடைந்துவிடுவதால், புதிய பாதையில் திரும்பி விட மனதினால் முடியும். ஆரம்பப் பயிற்சி அன்பர்கள் நிறை பேர் உட்கார்ந்து தவம் செய்யும் கூட்டுத் தவத்தில் கலந்து கொள்ளும் போது, அவர்களின் தவ ஆற்றலும் சேர்ந்து, அந்தக் கூட்டுத் தவத்தில் கலந்து கொள்ளுகின்ற ஆரம்ப சாதகர்களின் ஆற்றலும் சிறிது சிறிதாகப் பெருகி வரும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
உயிரே படர்க்கையில் அறிவு :
“உயிர் நிலையை உற்றுற்று
உள்ளுணர்ந்து
ஒடுங்கி விரிந்து ஆராய்ந்து
ஒத்துணர்ந்தேன் ;
உயிர்தானே ஏற்றவாறு
அமைத்துக்கொண்ட
உடலூடே இயங்குங்கால்
உணர்ச்சியாக ;
உயிர் மலர்ந்து மணக்கும்
திருக்கோலமேதான்
உருவற்று ஓங்குமுயர்
அறிவுமாகும் ;
உயிரறிய அறிவறிய
ஆர்வமுள்ளோர்
உருக்கமுடன் எனைச்சார்ந்தால்
உரைப்பேன் உண்மை.”
“எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்;
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்
எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
NEXT : ஜனவரி 06 : உள்ளத்தின் சோதனை
PREV : ஜனவரி 04 : தவம்