x

செப்டம்பர் 28 : கவலை ஒழித்தல்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


கவலை ஒழித்தல் :
.

“தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஓர் மன நோய் தான் கவலை. நிகழ்ச்சிகளுடனோ அல்லது பொருள்களுடனோ எந்த தொடர்பும் இல்லாமல் மனதுடன் தொடர்பு கொண்டுள்ளது கவலை. மனம் பிரச்சனைகளை அறிந்து கொள்ள முடியாமல் போனால், பிரச்சனைகளை முடிக்க முடியவில்லை எனில், அந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாவிட்டால் கவலையின் பிடியில் சிக்கிக் கொள்கின்றது. தேவைக்கும் இருப்புக்கும் இடையே இடைவெளி, எதிர்பார்ப்புக்கும் பெறுவதற்கும் இடையே இடைவெளி, தனக்கும் பிறர்க்கும் இடையே ஏற்படும் முரண்பாடு, ஆசைக்கும் திறமைக்கும் இடையே உள்ள வித்தியாசம் இவையாவும் கவலைக்கு வித்தாகின்றது. மனதை கடமையில் செலுத்தி இடையறாத முயற்சியுடன் முறையான திட்டத்துடன் செயல்பட்டால் இவை அனைத்தையும் சரி செய்ய முடியும்.
.

ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஒவ்வொருவருக்கும் தோன்றும். அவை வந்து கொண்டும் போய்க் கொண்டும் தான் இருக்கும். பிரச்சனைகளை கண்டு பயந்துவிடக் கூடாது. வாழ்க்கையின் ஒரு பகுதி தான் பிரச்சனை. கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், அவை எவ்வாறு தீர்த்துவைக்கப்பட்டது என்பதை எண்ணிப் பாருங்கள். அதே போன்று தற்பொழுது தோன்றியுள்ள பிரச்சனையும் காலத்தில் அவ்வாறே தீர்க்கப்பட்டுவிடும்.
.


பிரச்சனையைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு தைரியமாக அவற்றை தீர்ப்பதற்கு என்ன வழி என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பிரச்சனைக்கு தீர்வு உடனே கிடைக்காவிட்டால் இயற்கைக்கு விட்டுவிடுங்கள். சிறிதுகாலம் பொறுத்திருங்கள். சரியான நேரத்தில் சரியான தீர்வு தானாகவே கிடைத்துவிடும். இங்கு இயற்கை சட்டத்தை நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் தான் எந்த ஒரு பிரச்சனையும் பெரியதாகத் தோன்றும். அதற்கு தீர்வு அதனுள் இருக்கிறது. அது தவறாமல் கிடைத்துவிடும். இதற்கென நாம் ஓர் வழி முறையை ஏற்படுத்திக் கொண்டு சரியாக அதை கடை பிடித்து வந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு பெற்று விடலாம். அதனால் மனதின் சுமையும் நீங்கிவிடும்.”

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

“கவலை யென்பதுள்ளத்தின் கொடிய நோயாம்
கணக்குத் தவறாய் எண்ணம் ஆற்றலாம்,
கவலை யென்பதோ வாழ்வில் சிக்கல் கண்டு
கலங்கி மனம் திகைப்படையும் நிலைமையாகும்;
கவலை உடல்நலம் உள்ள நலன் கெடுக்கும்
கண் முதலாய்ப் பொறி ஐந்தின் வளம் கெடுக்கும்
கவலையினை முயற்சி சிந்தனை இவற்றால்
கடமையினைத் தேர்ந்தாற்றி வெற்றி கொள்வோம்”.
.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!