வாழ்க வையகம் வாழ்கவளமுடன்.
.
எளியமுறைக் குண்டலினி யோகம் :
.
உயிர்த் தொடர்பான இயக்கம், இருப்பு, இயல்பு ஆகியன மறை பொருள்களாகவே உள்ளன. அவைகளைப் பற்றிய முறையான விளக்கமும் தெளிவும் ஒருவரிடம் அமைந்தால் தான் அவரால் பொறுப்புள்ள ஒருவராக வாழ இயலும். அத்தகைய விளக்கத்தையும் தெளிவையும் தந்து வருவதே எளியமுறைக் குண்டலினியோகம்.
.
உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பின் கீழ் அளிக்கப்பட்டு வரும் எளிய முறைக் குண்டலினியோகப் பயிற்சியின் கீழ், தவம் (Meditation) தற்சோதனை (Introspection) குணநலப்பேறு (Sublimation) முழுமைப்பேறு (Perfection) என்ற நான்கு வகையான பயிற்சிகள் நல்கப்படுகின்றன. இவற்றுள் மூலாதாரத்தில் குண்டலித்துக் கிடக்கும் உயிர்ச்சக்தியை, கீழிருந்து மேலோங்கச் செய்து, ஒவ்வொரு மையத்தில் நிறுத்தி இயக்கி மேல் நிலைக்குக் கொண்டு வருவதே தவம் என்கின்றோம். இதனைச் செய்ய, பழங்காலத்தில் பல ஆண்டுப் பயிர்சியும் குருவினிடம் ஒடுக்கமும் இன்றியாதன என்றனர்; இதனைக் கடுமையான முறையாக்கிக் காட்டினர்; சில காலங்களில் இடையில் நிறுத்தி இக்கட்டையும் பெற்றனர். ஆனால் உலக சமுதாய சேவா சங்கத்தின் முறைப்படி ஏற்கனவே குண்டலினி சக்தி பயிற்சி பெற்றவர்கட்கு ஆசிரியப் பயிற்சி அளித்து விரும்புவோருக்கு வழிகாட்டி அதே உயிர்ச் சக்தியை மேலே கொண்டு வரச் செய்கின்றோம். இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அந்த உணர்வை உணர்வர்; எளிமையைத் தெளிவர்.
.
இந்தத் தவமுறையைத்தொடர்ந்து பயில்கின்றவர்கட்கு அனுகூலங்ககள் பல ஏற்படும். கூறிய அறிவு, தெளிந்த சிந்தனை, விழிப்பாற்றல் ஆகியன உண்டாகும். மன அமைதி நிலவும். அளவறியாது உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தும் போது உடற் செல்கள் வலுவிழந்து, உறுத்தல்கள், உளைச்சல்கள், உறுமல்கள், சோர்வுகள், துன்ப உணர்வுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இன்னும் எல்லை மீறும் போது நோய்கள் வருகின்றன. இன்னும் எல்லை மீறும் போது மரணமே ஏற்பட்டு விடுகின்றது. எந்த உயிராற்றலின் ஒழுங்கான வளர்ச்சி இந்த நலன்களை எல்லாம் தருகின்றதோ அந்த ஆற்றலின் மீது கருத்தை வைத்துச் செய்யப்படுவதே இந்தத் தவமுறையாகும்.
.
உயிராற்றலின் மேல் கருத்தை வைத்துத் தவம் இயற்ற உயிராற்றல் குண்டலித்து மேலே எழ எழ ஆற்றற்கதிர் அலைகள் ஏற்படுகின்றன. அந்த அலை இயக்கத்தின் ஒரு பகுதி மன இயக்கமாகவும், ஒரு பகுதி உடல் இயக்கமாகவும் மாறுகின்றது. இந்த இரண்டையும் பண்படுத்தும் வன்மையதே குண்டளினியோகம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * *
.
“அறிவதனை பக்தி நெறியில் இணைத்து
ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்த போது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்
ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டுகின்றேன்”.
.
அழைப்புக் கவி : ( …பாடல்)
அன்பர்களே வாரீர் !
அறிவின் இருப்பிடம்
.
அறிந்து இன்பமுற ( அன்பர்களே வாரீர், அறிவின் …)
இன்பநிலையதை ஏகநிலையதை
அன்பு நிலையதை
அறிந்திடலாம் இன்று ( அன்பர்களே வாரீர், அறிவின் …)
.
தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம்
என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்
அன்றாட வாழ்வை அறிந்தனுபவிக்க
இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்
( அன்பர்களே வாரீர், அறிவின் …)
.
பூரணதூலமும் பொருந்து சூக்குமம்
காரணமான கருவையு மறிந்து
ஆரணமான அனுவறிந்து சுடர்
தாரக மவுன தவத்தில் நிலைபெற
( அன்பர்களே வாரீர், அறிவின் …)
.
எத்தனை ஆயிரம் ஆயிரம் இன்பங்கள்
இவ்வுலகெங்கும் பேரண்ட முழுமையும்
அதன் அருளாட்சியாக நிறைந்துள்ளான்
அறிவை விரித்து அனைத்தும் துய்த்தின்புற
( அன்பர்களே வாரீர், அறிவின் …)
.
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும்
நீளாயுள் உடல்நலம் நிறைசெல்வம் மெய்ஞ்ஞானம்
ஓங்கிச் சிறப்புற்று உள்ள நிறைவோடு
உள்ளொளிபெருக்கி உண்மைப்பொருள் காண
( அன்பர்களே வாரீர், அறிவின் …)
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.