x

செப்டம்பர் 21 : தவம் அறம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


தவம் அறம் :
.

“ஞானிகள் உலகோர்க்கு நல்வாழ்விற்கென இரண்டு உயர் வழிகளைக் காட்டியுள்ளார்கள். அவை [1] அறம் [2] தவம். தனி மனிதனையும், சமுதாயத்தையும் வளம் பெறச் செய்வதும் மகிழ்ச்சியில் வைப்பதும், அமைதியோடு வாழச் செய்வதும் அறம், தவம் என்னும் இரு உயர் முறைகளேயாகும்.
.

அறம் என்னும் நெறி மூன்று உறுப்புகளையுடையதாகும். அவை [1] ஒழுக்கம், [2] கடமை, [3] ஈகை என்பனவாகும்.
.

இயற்கையாக அவ்வப்போது தோன்றும் துன்பங்களைச் சமப்படுத்தி இன்பமாக வாழ்வதற்கு எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் பயன்படுத்துகிறோம். எண்ணம், சொல், செயல் எனும் மூன்றில் எது ஒன்றாலும் ஆற்றும் எச்செயலும் வினை எனப்படும். தனது துன்பத்தைப் போக்க, இன்பத்தை நுகர அல்லது தனது கடமைகளை நிறைவேற்றப் பயன்படுத்தும் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் விளைவாகத் தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுணர்ச்சிக்கோ, துன்பம் விளையாத அளவோடு, முறையோடு ஆற்றும் செயல் நெறி ‘ஒழுக்கம்’ எனப்படும்.
.

நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறோம். காக்கப் பெறுகிறோம். வாழ்வளிக்கப் பெறுகிறோம். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நாளிலும் எண்ணிறந்த மக்களின் உழைப்பும் உதவியும் பயனாகின்றன. ஒருபிடி உணவை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் அது எத்தனை மக்களின் உழைப்பால் நம் கைக்கு வந்துள்ளது எனும் உண்மை விளங்கும். இது போன்று உடை, உறைவிடம் மற்றும் பல வசதிகளும் பல மக்கள் உழைப்பாலும் உதவியாலும் ஒருவருக்கு கிடைப்பது விளங்கும். எனவே ஒவ்வொருவரும் சமுதாயத்திற்குக் கடன்பட்டவரேயாவார். இந்தக் கடனை எவ்வாறு தீர்ப்பது ?
.


தான் அடைந்துள்ள உடல் வளம், கல்வி, தொழில் திறம், செல்வாக்கு ஆகிய நான்காலும் நலமும் வளமும் ஓங்கும் வகையில் தொண்டாற்றிச் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய கடனைத் திருப்பித் தந்து கொண்டிருக்க வேண்டும். கடன் திருப்பும் கருத்தே கடமை எனும் சொல்லாக [கடன் + மை = கடமை] வழக்கில் வந்துள்ளது.”
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

விரிந்த அறிவே இன்பம் விளைக்கும்:-

“இயற்கைச் சமுதாயம் சூழ்நிலை தேவை பழக்கம்
இவ்வைந்து கோணத்தில் இயங்குகிறான் மனிதனவன்;
இயற்கைச் சமுதாயம் இரண்டை உணர்ந்தும் மதித்தும் –
எஞ்சிய மூன்றைச் சீராய் இணைத்தாற்ற இன்பமயம்.”
.

வினைப் பயன் :

“வினைக்கு ஒரு விளைவுண்டு. உடல் உள்ளத்தின்
விரைவாற்றலுக்கு அது ஒத்தால் இன்பம்.
முனைத்து அது பரு உடற்கோ மூளைக்கோ ஓர்
முரண்பட்ட விளைவானால் துன்பம் ஆகும்.
தனக்கும் அது பிறருக்கும் உடல் மூளைக்குத்
தவறாக அணு அடுக்கைச் சீர்குலைத்து
மனக்களங்கம் உடலில் நோய்ப் பதிவாய்க் கொள்ளும்.
மதித்து வினை விளைவுகளைக் கணித்து வாழ்வீர்.”
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!