x

செப்டம்பர் 20 : விழிப்பு நிலை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


.
விழிப்பு நிலை :

.
“இயற்கை நியதியை – ஒரு செயலின் விளைவிலிருந்து ஒரு போதும் தப்பமுடியாது என்ற நியதியை உணர்ந்து எப்போதும் விழிப்போடு செயலாற்றப் பழகிக் கொள்ள வேண்டும். எண்ணம், சொல், செயல், மூன்றிலும் விழிப்போடு இருக்க வேண்டும். இதற்கு தவமும் தற்சோதனையும் மிகவும் உதவியாகும். இவற்றால் அறிவு கூர்மையடைந்து கிரகிக்கும் சக்தி (Receptivity) அதிகப்படும். பிறரோடு ஒத்துவாழும் நிலையும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சகித்துப் போகும் நிலையும் (Adaptability) உண்டாகும். இதனால் தன்னலங்கருதாத தகைமையுணர்வு (Magnanimity) மேலோங்கும். இவற்றால் தீமை விளைவிக்கும் செயலில் ஈடுபடமுடியாத நிலை, ஆக்கச் செயலில் மட்டுமே ஈடுபடக் கூடிய தெளிவு (Creativity) தானே உண்டாகிவிடும். இவையே மன அமைதிக்கு அடிப்படையாகும். விரிவு, விளக்கம், விழிப்பு என்ற நிலைகளும் கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப்போதல், பெருந்தன்மை, ஆக்கச் செயல் ஈடுபாடு ஆகியனவும் வளர்க்கப்படும் அளவுக்கு மன அமைதியும் கைகூடும்.


.
இவற்றை அறிவால் அறிந்து கொண்டால் மட்டும் போதாது. அனுபவபூர்வமாக வாழ்க்கையில் கடைப்பிடித்து பயன் காண வேண்டும். உலகெங்கும் சமாதானத்தையொட்டி விழிப்புணர்ச்சி ஏற்பட்டு உள்ளதை இன்று காணமுடிகிறது. உலகிலுள்ள அரசியல்வாதிகளும், அறிஞர்களும், யுத்தம் செய்து தான் வாழவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள். இவர்கள் ஒன்றுகூடிப் பேசுவார்களேயானால் யுத்தமின்றி வாழமுடியும் என்ற தீர்மானத்திற்கு வந்து அதற்கான திட்டங்களையும் வகுப்பார்கள். ஆகவே சோர்வின்றி நம்பிக்கையோடு நம் கடமையை செவ்வனே செய்து வருவோமாக.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * *

.
உலக நல வேட்பு :

“உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்
உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்
உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும்
உலகெங்கும் மனிதகுலம் அமைதியென்னும்
ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்யவேண்டும்”.

.
உலக ஆட்சி ஏற்படும் காலம் :

“ஆண்டு ஐம்பதுக்குள்ளே உலகோர் இந்த
ஆட்சி முறையை நன்றென் றேற்றுக்கொள்வார்.
மீண்டும் ஒரு நூற்றாண்டின் முடிவுக்குள்ளே
மேலோங்கி உலகெங்கும் அமுலாய் நிற்கும்.
நீண்டு விடுகிறதே நாள் அதிகம் என்று
நினைந்து, ஆதரவாளர் சோர்வு கொள்வார்.
வேண்டுமென்று நான் விரும்பிக் கணிக்கவில்லை;
விரிந்து நின்று ஆய்ந்து கண்ட முடிவு ஈது”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!