x

செப்டம்பர் 19 : சீரிய வழிகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


சீரிய வழிகள் :
.

“நமது குண்டலினியோகம் நான்கு உறுப்புகளைக் கொண்டு உள்ளது. அவை அகநோக்குப் பயிற்சி, தற்சோதனை, மன வினை தூய்மை, முழுமைப் பேறு (Meditation, Introspection, Sublimation and Perfection) இந்நான்கும் ஒன்றை ஒன்று தழுவி நிற்கின்றன. ஒன்றால் ஒன்று வளம் பெறுகின்றது. அறியாமையால் வந்த களங்கத்தைப் போக்கி, அதனால் விளைந்த வாழ்க்கைத் துன்பங்களைக் குறைத்து அமைதியை மனிதனுக்கு அளிக்கவல்லது குண்டலினி தவம். சாதனை செய்து அதன் மூலம் பயனடைய வேண்டிய ஒரு பெரிய நற்பேறு இந்தத் தவம். இதன் மதிப்பு உணர்ந்து பயின்று பயன் பெறுவீர்களாக.
.

தவத்தில் உட்காரும் போது மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது என்று சில அன்பர்கள் சலிப்படைகின்றார்கள். இது தான் இயற்கை நியதி. நாம் வாழ்வில் பெற்ற அனுபவங்கள் யாவும் நம்மிலே பதிவாகி அவை எப்போதும் எண்ணங்களாக பிரதிபலித்துக் கொண்டே தான் இருக்கும். இந்தப் பதிவுகளே நமது வாழ்க்கை நிதி, நாம் சில காலம் தவம் பயின்றால் பிறகு நமது மனம் வலிவு பெறும்போது, நாம் எப்போதும் விழிப்பு நிலையில் நம்மை பழகிக்கொள்ளும் போது, மனம் அலையுறுவது படிப்படியாகக் குறையும். தவம் உயர உயர தற்சோதனையில் ஆழ ஆழ அந்த அளவிற்கு நாம் நமது மனம் நிலைபெறக் காணலாம்.
.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * *.

இறை நிலை :

“தெய்வத்தை நாடுவதும் தெளிந் தறிவில் தேறுவதும்
திருநிலையாம் மனிதனவன் பிறவி நோக்கம் பயனாம்;
தெய்வநிலை தெரிந்து கொண்டேன், திருவருளே நானாகத்
திகழும் அனுபவம் எனக்கு இல்லை யென்பர் சில்லோர்;
தெய்வமெனும்பாலைப் பிறை இட்டுத்தயிராக்கிப் பின்
தேடுகிறார் பாலை, அதைக் காணேன் என்றால் மயக்கே
தெய்வம் உயிர்க்குள் அறிவாய் அதன் படர்க்கையிலே
திகழ்கிறது மனமாகத் தேடுவது எதை? எங்கே?”
.

ஞானம் தேடும் பக்தர்கள் :

“தேடுகின்ற பொருள் என்ன ஏன் நமக்கு
தெரிந்தவர் யார் கிடைக்குமிடம்எது ஈதெல்லாம்
நாடுகின்ற வழக்கம் சிலபேரே கொள்வார்,
ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து
ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்;
ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்
வாடுகின்றார், உளம்நொந்து இருளைத்தேட
விளக்கெடுத்துப் போவதைப் போல முரண்பாடன்றோ?”
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!