வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
வாழ்வில் வெற்றி ஒளி வீசட்டும் :
.
“சூடுள்ள பாத்திரத்தைக் கந்தைத்துணி உதவி கொண்டோ, கொரடாவின் உதவி கொண்டோ அடுப்பிலிருந்து இறக்கிப் பயன் காண்பது போல, கருத்து வேறுபாடு உடையவர்களோடு மனநிலையுணர்ந்து அன்பு காட்டல், பொறுமை கொள்ளுதல் கடமையுணர்ந்து ஆற்றல் எனும் மூன்றிணைப்புத்திறன் கொண்டு பழகி வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் அமைதியும் காணவேண்டும். இந்த முறையில் விழிப்போடு வாழ்வை நடத்தும் போது வெறுப்புணர்ச்சி என்ற தீமை அணுகாது. சினமும் கவலையும் எழாது வளராது. வாழ்வில் நாளுக்கு நாள் அன்பும் இன்பமும் அமைதியும் ஓங்கும்.
.
இந்த விளக்கத்தை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு கணவன் – மனைவி, பெற்றோர் மக்கள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என்ற எல்லா உறவுகளிலும் பயன்படுத்தி முதலில் வெற்றி பெறுங்கள். இதன் விளைவாக வெளி உலக மக்களிடம் கொள்ளும் தொடர்பிலும் உங்கள் வாழ்வின் மற்றெல்லாப் பகுதிகளிலும் வெற்றி ஒளி வீசும். போதனை மட்டும் போதாது. சாதனை செய்க.”
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * *
.
இல்லற நோன்பு :
“அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்
அவரவர்கள் துணைவர்களை மனம் வருந்தச் செய்தால்
துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்
தொல்லை தரும் சாபமாம் நோய்கள் வரும் தேர்வீர்
இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்தலோடு
இன்முகமும் பொறுமை தியாகம் தகைமை காட்டவேண்டும்
தன்புகழ் விளக்கம் நல்ல தரமுடைய மக்கள்
தழைப்பார்கள்இல்வாழ்வை ஆய்ந்து கண்ட உண்மை.”
.
தன் குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்பாம் :
“தன் குற்றம் குறை கடமைத் தன்னுள் ஆய்ந்து
தான் கண்டு தனைத் திருத்தும் தகைமை வந்தால்
ஏன் குற்றம் பிறர்மீது சுமத்தக் கூடும்,
ஏதேனும் கண்டாலும் மன்னித்தாலும்
மேன்மைக்கே மனம் உயரும் பிறர் தவற்றால்
மிக வருத்தம் துன்பமது வந்த போதும்
நன்மைக்கேயாம் செய்த பாபம் போச்சு
நான் கண்ட தெளிவு இது நலமே பெற்றேன்.”
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.