x

செப்டம்பர் 16 : மனிதனும் இறைவனும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


மனிதனும் இறைவனும் :
.

“ஒருவழியில் பார்த்தால் மனிதன் இறைவனைவிட ஒரு படி மேலானவன் என்று கொள்ளலாம். அவனிடம் இறைத்தன்மை எல்லாம் இருக்கின்றன. (God is omnipotent) இறைவன் எல்லா ஆற்றலும் நிறைவாகப் பெற்றவன். அத்தன்மை மனிதனிடம் இருக்கின்றது. (God is omnicient) இறைவன் எல்லாம் அறிந்தவன். அத்தன்மையும் மனிதனிடம் இருக்கின்றது. (God is omnipresent) இறைவன் எங்கும் இருப்பவன். மனிதனும் அந்நிலையை எய்த முடியும். ஆராய்ச்சியின் மூலமும், யோகத்தின் மூலமும் உள்ளது உள்ளபடியே தன்னுணர்வாக, அகக் காட்சியாகப் பெற்றுவிட்டால் மனிதன் இறைத்தன்மையை முழுமையாகப் பெறுகிறான்.
.

மனிதனிடம் கடவுள் தன்மை எல்லாமே இருப்பதோடு கடவுளை அறிந்து கொள்ளும் பெருமையும் இருக்கிறது. இத்தகைய பெருமை அவனிடம் இருக்க அதனை மறந்து தன் உடல் அளவிலே எல்லை கட்டிக் கொண்டிருக்கிறான். இந்நிலையிலேயிருந்து விடுதலை பெற வேண்டுமானால் அவன் தன் உயிரைப் பற்றிய அறிவு வேண்டும். உயிரின் தன்மை என்ன? அதன் மூலம் என்ன? பரம்பொருளே அதன் எழுச்சி நிலையே உயிராக இருக்கிறது. இன்று இந்த உடலில் உயிர் இருந்தாலும் பரம்பொருளின் தொடர்பு அறுபடாமல் தொடர்ந்து இருந்து கொண்டுள்ளது.
.


உடலுக்குள் இருக்கும் உயிர், உணர்ச்சியின் அனுபோகத்தில் உடல் வரைக்கும் எல்லை கட்டிக் கொண்டு இருந்தாலும் தன் முழுமையை உணர்ந்து கொண்டால் – தன் மூலத்தையும் வியாபகத்தையும் அறிந்து கொண்டால் எல்லாவற்றிலும் தன்னையே பார்க்கின்ற ஒரு தன்மை வந்து விடுகின்றது. சிறுமை, பெருமை, தன்முனைப்பு எல்லாம் நீங்கி விடுகின்றது. இந்த நிலையில் பிறரை மதிக்கவும், ஆதரிக்கவும், பரிவு காட்டவும், மேல்நிலைக்குக் கொணரவுமான பொறுப்புணர்ச்சியைப் பெறுகிறான்.”
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * *

தன்னை யறிந்தால் கடவுளை அறியலாம் :

“உன்னையோ கடவுளையோ அறிய வென்றால்
ஒரு குறுக்கு வழியுண்டு; உள்ளுணர்ந்து
தன்னையறிந் தந்நிலையில் நிலைத்து வாழும்
தனிக்கருணை வடிவான குரு வடைந்தால்
அன்னை வயிற்றடைந்துருவாய் உடலாய் வந்த
ஆதி கருவைப் புருவத்திடையுணர்த்தப்
பின்னை நீ அவ்விடத்தில் நிலைக்க,
உந்தன் பேதமற்ற நிலை, கடவுளாகி நிற்கும்”.
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!