வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
துன்பம் நீங்கிய தூயவர் :
.
“நான் ஒரு சாம்யம் (formula) அடிக்கடி கூறிவருகிறேன். அதாவது பாவப்பதிவு என்ன என்றால் அது துன்பம் தரக்கூடிய செயல்களும், அந்தச் செயல்களால் ஏற்பட்ட பழிச்செயல் பதிவுகளுமாகும். அதேபோன்று அந்தத் துன்பத்துக்குரிய பதிவுகளை நீக்கி இயற்கை இன்பத்தைப் பாதுகாத்துக் கொள்ள, அனுபவிக்க, அதன் மூலமாக அறிவுக்கு விடுதலை கிடைத்து நாளுக்கு நாள் அறிவு மேலோங்க எந்தச் செயல்கள் உதவியாக இருந்தாலும் அவையெல்லாம் புண்ணியம். அந்த முறையில் பார்க்கப் போனால் இந்த உடற்பயிற்சி, தவம் இவை இரண்டும் பாவப்பதிவுகளை எல்லாம் போக்கவல்லன. எவ்வாறு என்றால் நாம் முன்பின் செய்த தவறுகள் காரணமாக உடல் அணு அடுக்குச் சீர்குலைந்து அதன் மூலமாகச் சீர்குலைந்த இடத்தில் மின்சாரக் குறுக்கு (Short circuit) ஏற்பட்டு மனதிலேயும் உடலியேயும் நோய் தோன்றி அது பரவி பின்னர் நிலைத்தும் இருக்கிறதே, அதுவே வினைப்பதிவாகும். அதுதான் வித்தின் வழியாகக் குழந்தைகளுக்கு கூடப் போவது. இந்தப் பழிசெயல் பதிவுகளிலிருந்து அதனால் விளையும் துன்பங்களிலிருந்து நீங்கிக் கொண்டு விடுதலை பெற்றத் தூயவர்களாக உடலாலும் உள்ளத்தாலும் நன்மக்களாக வாழ வேண்டும். அமைதியும் மகிழ்ச்சியும் பெற வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தோடு தான் பின்பற்றி வருகிறோம்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
வினைப் பதிவு:
“முன்னோர்கள் செய்த வினைப்பதிவு வித்தில் உண்டு
மூளையிலே உன்செயலின் பதிவனைத்தும் உண்டு
பின்னே நீ செய்தவினைக்குப் புலனைந்தும் இயக்கிப்
பெற்றப் பழக்கப் பதிவு உண்டு இம் மூன்றும்
உன்னைநீ உள்ளுணரும் அகத்தவத்தை ஆற்றி
ஒவ்வொன்றாய்ப் பழிப்பதிவை அகற்றி வரவேண்டும்
தன்னில் பதிவான வினைப்பதிவுகளை மாற்ற,
தணிக்க, பொருள் செல்வாக்குப் பயனாகாதுணர்வீர்.
.
வினைப் பயன் :
“வினைக்கு ஒரு விளைவுண்டு உடல் உள்ளத்தின்
விரைவாற்றலுக்கு அது ஒத்தால் இன்பம்
முனைத்து அது பரு உடற்கோ மூளைக்கோ ஓர்
முரண்பட்ட விளைவானால் துன்பம் ஆகும்.
தனக்கும் அது பிறருக்கும் உடல் மூளைக்குத்
தவறாக அணு அடுக்கைச் சீர்குலைத்து
மனக்களங்கம் உடலில் நோய்ப் பதிவாய்க்கொள்ளும்
மதித்து வினை விளைவுகளைக் கணித்து வாழ்வீர்”.
.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.