x

செப்டம்பர் 13 : ஆன்ம விழிப்பு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


ஆன்ம விழிப்பு :
.

“உயிரை அறிய வேண்டுமாயின் படர்க்கை நிலையில் சென்று அலைந்து செயல்படும் மனதை உள் அடங்கச் செய்ய வேண்டும். மனம் எப்போதும் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். உடலில் இரத்தச் சுழல் உள்ளவரை மனமும் சுழன்று கொண்டுதான் இருக்கும். தூங்கும்போது மனம் ஒடுங்குகிறது என்கிறோம். அப்போதும் அது இயங்கிக் கொண்டு தான் இருக்கும். ஆனால் அது புலன்களைக் கடந்து சூக்குமத்தில் இயங்குகிறது. இதையே நடுமனம் (Sub-conscious) அடிமனம் (Super conscious) என்கிறோம். அலையும் மனதை வெளியில் அலைய ஓடாமல் தடுத்து உயிரிலேயே உள்ளொடுங்கும்படி செய்வது தான் அகத்தவம் – அக நோக்குப் பயிற்சியாகும். மனிதன் தான் பிற புறப் பொருள்களோடு தொடர்பு கொண்டு இன்ப துன்ப அனுபவங்களைப் பெறும்போது மனமாக விரிந்து, செயல்படுகிறான். தானே தான் உள்ளொடுங்கும் போது உயிரில் லயமாகி ஆன்மாவாக விளங்குகிறான். தானே தான் பரம்பொருளோடு கலந்து நிற்கும்போது – உயிரின் இருப்பு நிலையான மூல நிலையை அடையும் போது பரம்பொருளாகவும் இருக்கிறான். உயிர் வேறு, மனம் வேறு அல்ல என்ற பேருண்மையை உணர்ந்தும் ஒவ்வோர் உயிரிடத்தும் அன்பும் மதிப்பும் ஏற்பட்டு பிற உயிர்கள் மீது பெருங்கருணையும் தோன்றிவிடும்.
.


குண்டலினி யோகம் மனிதனை இந்த அளவிற்கு உயர்த்துகின்றது. இதைத் தான் மனவளக்கலை என்று சொல்கிறோம். ஓடித்திரியும் மனதை நம் விருப்பப்படி செயலாற்றும்படி செய்வதற்குத் தான் நமது எளியமுறைக் குண்டலினி யோகம் தேவைப்படுகிறது. ஓடும் மனதை உயிரில் லயிக்கும்படி செய்வது தான் (Apperceptive Meditation) மனதடக்கு முறைத்தவம், புறப்பொருட்களோடு நம் புலன்கள் மூலம் தொடர்பு கொள்ளும்போது நம் மனம் – நாமே – அதுவாக மாறிவிடுகிறோம். நாம் ஒரு பொருளைக் காண்கிறோம். அப்பொருளை நினைக்கும்போது அந்தக் காட்சியே ஒரு அச்சாக (Mould) அமைந்து அதை நினைக்கும்போதெல்லாம் அதையே நமது அகக் காட்சியாகக் காண்கிறோம். ஆகவே அவற்றை புலன்கள் மூலம் ஒலியாகவோ, ஒளியாகவோ, உணர்வாகவோ, ருசியாகவோ அனுபவிக்கும் போது உயிராற்றல் நம்மிடம் மிகுந்திருப்பின் இன்ப உணர்வாகவும், உயிராற்றல் குறைந்து உடல் தாங்க இயலாத போது துன்ப உணர்வாகவும் பெறப்படுகின்றது. இதைத்தான் போத அறிவு (conscious mind) என்கிறோம்.”
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * *
.
உள்ளத்தில் கள்ளம் வேண்டாம்:

“உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேசினால்,
உள்ளொளி தீயாகி, உடலைக் கெடுத்திடும்”.
.

மனமே இயற்கையின் மாநிதி:

“மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ
மனமதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே
மனமதை உயர்த்தினால் மட்டில்லா இன்பமாம்
மனத்திலே உல எல்லாம் மற்றெங்குத் தேடுவீர்?.
.

மனத்தூய்மை:

“பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் நான்கிலே
புகுந்தழுந்தி மனித மனம் புண்ணாய் வருந்துவோர்
இருள் நீங்கி இன்பமுற என் விளக்கம் கூறுவேன்;
இறை நிலையே எங்கெதிலும் இருப்பாய் அமர்ந்தாற்றிடும்
அருள் நடனக் காட்சியை அகத்துணர்வாய்க் கொள்ளுவீர்,
அப்போதும் எப்போதும் அறிவு விரிவாகியே
மருள் நிலையில் ஏற்ற ஆசை மற்றும் பழிச்செயலெல்லாம்
மாறிவிடும் மெய்ஞ்ஞானம் மலரும் உள்ளொளி என”.
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!