வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
தன்னிலை விளக்கம் :
.
“உடல், உயிர், மனம், மெய்ப்பொருள் என்ற நாலும் பொருள் நிலையில் ஒன்றே, விரிந்த மலர்ச்சியில் இயங்கும் நிலையில், உணரும் ஆற்றலில் பல பிரிவுகளாகி விட்டது. மெய்ப் பொருள், ஆகாசம் என்ற நிலையில் ஆற்றலாகி அதன் திணிவு நிலைகளின் வேறுபாடுகளால் பஞ்ச பூதங்களாகத் திகழ்கின்றது. உயிர்களிடத்து பஞ்ச பூதங்களைப் பிரித்துணர விளைந்துள்ள கருவிகளே பஞ்சேந்திரியங்கள். பஞ்சேந்திரியங்கள் மூலமாக எழுச்சி பெற்று ஐயுணர்வுகளாக விளங்குகின்ற விதமே பஞ்சதன் மாத்திரை. மெய்ப்பொருள் பஞ்சதன் மாத்திரைகளாக இயங்கும் போது பெறும் அனுபவமே, அடையும் தன்மையே மனம். மெய்ப்பொருள் தான் மனமாக இயங்குகின்றது. பர நிலைக்கும் மன நிலைக்கும் இடையே பஞ்ச பூதம், பஞ்சேந்திரியம், பஞ்சதன் மாத்திரை இந்நிலைகள் தொடரியக்க களமாகவிளங்குகின்றன. இவ்வைந்து நிலைகளையும் இணைத்துத் தனது மூலம், சிறப்பு, முழுமை எனும் நிலைகளை உணர்வதே தன்நிலை விளக்கமாகும். இதனால் ஆணவமெனும் திரை விலகி அருட்பேறு அகக் காட்சியாகும். அமைதியும் நிறைவும் அறிவுக்கு உண்டாகும்.
.
இதன் விளைவாக இனி ஒழுங்குற்ற முறையில் நினைக்கவும், செயல் புரியவும் தனது திறம் ஓங்கும். பாவப்பதிவுகள் ஏற்படா. உள்ள பதிவுகள் கழியும். மயக்கத்தால் ஏற்பட்ட பொருள் பற்று விலகி தன்னிறைவு உண்டாகும். இப்பெரும் பேற்றினைப் பெறுவதே மனிதப் பிறவியின் நோக்கம். ஒரு நல்வாய்ப்பு உங்களுக்கு இப்பேற்றினைப் பெறுவதற்கு கிட்டி விட்டது. குண்டலினி யோகம் இவ்வனைத்து நலன்களையும் தரவல்லது. நீங்கள் அனுபவத்தாலும் ஆராய்ச்சியாலும் உணர்ந்து வருகின்றீர்கள். குண்டலினி யோகத்தின் மூலம் மனதை அதன் அடித்தளமாகிய உயிரிலும் அதன் தொடக்க நிலையாகிய மெய்ப்பொருளிலும் நிலைக்கச் செய்ய முடிகிறது. இந்த முறையான பயிற்சி நிச்சயம் முழு பயனளிக்கும்.”
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * *
.
தன்னிலை விளக்கம் :
“இயற்கையின் ஆதிநிலை பிரம்மம் ஆகும்
எண்ணும், இரசிக்கும் நிலையில் இதே அறிவாம்;
இயற்கையினை ஈசன், உலகம், உயிர்கள்
எனப் பிரித்துப் பேசிடினும் பொருத்தமேதான்,
இயற்கையின் உச்ச நிலையாக உள்ள
எண்ணத்தைப் பண்படுத்தி நுணுகி ஆய்ந்தால்
இயற்கை, அறிவு இரண்டும் ஒன்றாய்க்காணும்,
இதுவே தன்னிலை விளக்கம் அறிந்து சொன்னேன்”.
.
தன்னை யறிந்தால் கடவுளை அறியலாம் :-
“உன்னையோ கடவுளையோ அறிய வென்றால்
ஒரு குறுக்கு வழியுண்டு; உள்ளுணர்ந்து
தன்னையறிந் தந்நிலையில் நிலைத்து வாழும்
தனிக்கருணை வடிவான குரு வடைந்தால்
அன்னை வயிற்றடைந்துருவாய் உடலாய் வந்த
ஆதி கருவைப் புருவத்திடையுணர்த்தப்
பின்னை நீ அவ்விடத்தில் நிலைக்க,
உந்தன் பேதமற்ற நிலை, கடவுளாகி நிற்கும்”.
.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.