x

செப்டம்பர் 07 : உள்ளத்தனைய உயர்வு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


உள்ளத்தனைய உயர்வு :
.

“தீய எண்ணங்களைக் கண்டு பயப்பட வேண்டும். நீங்களே முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருங்கள். தீய எண்ணம் வருவதற்கு இடமிருக்காது. எந்நேரமும் ஏதேனும் ஒரு சங்கற்பத்தை மனதில் சுழலவிட்டுக் கொண்டு இருந்தாலும் கூட அது தீய எண்ணத்தை விலக்கும். வாழ்க்கையில் அந்தந்த காலக் கட்டத்தில் ஏற்படும் பிரச்சனையை வெற்றி கொள்வதற்கான சங்கற்பமாகவும் அது இருக்கலாம். அல்லது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பொதுவான தொரு சங்கற்பமாகவும் இருக்கலாம்.
.

அன்பர்களே ! தீய எண்ணத்திற்கு ஒருபோதும் மனதில் இடம் அளிக்காதீர்கள். நல்ல எண்ணத்தைத் தேடிப்பிடித்து மனதில் ஏற்றி வையுங்கள். உங்கள் மனதில் அடிக்கடி வந்து போகும் எண்ணங்களையும் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களையும் ஆராயுங்கள். விழிப்புநிலை, எண்ண ஆராய்ச்சியை வளப்படுத்தும். எண்ண ஆராய்ச்சி, விழிப்புநிலையை ஊக்குவிக்கும்.
.

எண்ணம்தான் அனைத்துமே ! எண்ணத்துக்கப்பால் ஒன்றுமே இல்லை, நன்மையையும் தீமையும் எண்ணத்துள்ளே ! சிறிதும் பெரிதும் எண்ணத்துள்ளே ! வெற்றியும் தோல்வியும் எண்ணத்தாலே ! பிரபஞ்ச இயக்கங்கள் அனைத்திலும் எண்ணம் தான் உயர்வானது. இன்பமோ துன்பமோ எண்ணத்திற்கு அப்பால் இல்லை.
.


எனவே அன்பர்களே ! எண்ணத்தின் தாழ்வு உங்கள் தாழ்வு. பிறகு யார் மீதும் குறை சொல்லிப் பயனில்லை. எண்ணத்தின் உயர்வு உங்கள் உயர்வு. எண்ணத்தின் உயர்வால் உலகுக்கும் உயர்வு. எண்ணத்தை ஆராய்ந்து எண்ணத்திற்கு உயர்வளித்து உங்களுக்கும் உலகுக்கும் உயர்வு கிடைக்கச் செய்ய இன்று முதல் சங்கற்பம் செய்து கொள்ளுங்கள்.”
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * *

எண்ணம் :

“எண்ணமே ஒரு நாடக மன்றம் போல்
எண்ணமே அதில் எண்ணற்ற நடிகர்கள்
எண்ணமே அதைப் பார்ப்போர் ரசிபோராம்
எண்ணமே அதன் நிர்வாகி உடையவன்”.
.

“எண்ணு சொல் செய் எல்லோர்ர்க்கும் நன்மை தர,
எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு.
.

“எண்ணம் சொல் செயலில் எழும் விளைவறிந்திடு,
உண்மையில் இன்பமே உண்டெனில் ஒழுக்கமாம்”.
.

“எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி,
எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்”.
.

“எண்ணம், சொல், செயலால் எவருக்கும் எப்போதும்
நன்மையே விளைவிக்க நாட்டமா யிரு”.
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!