வாழ்க வையகம் வாழ்க வளமுடன் :
.
யந்திரம் தந்திரம் :
.
“ஓர்மையும், கூர்மையும், வேகமும், வலிமையையும் கூடப் பெற்ற மனதில் ஒரு குணத்தையோ, ஒரு சக்தியையோ, ஒரு உருவத்தையோ கற்பனை செய்து கொண்டு அதனால் வரும் வேறுபாட்டைத் தன் உயிராற்றலிலேயே உணர்வது யந்திரம் (Medium) இதுவே உயிர்க்கலப்பு (To become one with it).
.
அந்த நிலையில் வாழ்வின் நலத்திற்கும், செம்மைக்கும் உயர்வுக்கும், லட்சியத்துக்குமான சங்கற்பங்களை (suggestions) தேர்ந்தெடுத்து அதனைத் திருப்பித் திருப்பி மனதில் சுழல விடுகிறோம். இதுவே தந்திரம். யந்திரத்தை வாழ்வின் பயனாக்கிக் கொள்ளல் தான் தந்திரம்.(To exploit it). பக்தி மார்க்கத்தில் இதை வேண்டுதல் (Prayer) என்பார்கள். மனம் குவிதலை பக்தி மார்க்க மந்திரம் என்றும், தோத்திரத்தைப் பக்தி மார்க்கத்தின் யந்திரம் என்றும் சொல்லலாம்.
.
நவக்கிரக தவத்தில் அவற்றின் குணங்களை எண்ணுகிறோம். அவற்றோடு உயிர்க்கலப்பு பெறுகிறோம். இது யந்திரம். வாழ்க்கை நலத்திற்கு அவற்றின் ஆற்றல் பயனாகும் என்று சங்கற்பம் செய்து கொள்கிறோம். இது தந்திரம்.
.
இதே மந்திர, யந்திர, தந்திரங்களைச் சடங்குச் சம்பிரதாயமாக (Traditional Rituals) செய்தால் அது ஹோமம், வேள்வி எனப்படுகிறது. பொருள் தெரிந்து, முறை தெரிந்து பயன் வரும் வழி தெரிந்து அறிவு பூர்வமாகச் செய்வது தவம்.”
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * *
.
எளிமைபடுத்தப்பட்ட குண்டலினி யோகம் :
.
“இறைநிலையே அறிவாக இருக்கும்போது
இவ்வறிவை சிலைவடிவத் தெல்லை கட்டி
குறைபோக்கப் பொருள், புகழ், செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;
நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர்வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேட
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்.”
.
இறைநிலை:
“தெய்வத்தை நாடுவதும் தெளிந் தறிவில் தேறுவதும்
திருநிலையாம் மனிதனவன் பிறவி நோக்கம் பயனாம்;
தெய்வநிலை தெரிந்து கொண்டேன் திருவருளே நானாகத்
திகழும் அனுபவம் எனக்கு இல்லை என்பர் சில்லோர்;
தெய்வமெனும் பாலைப் பிறை இட்டுத்தயிராக்கிப் பின்
தேடுகிறார் பாலை, அதைக் காணேன் என்றால் மயக்கே;
தெய்வம் உயிர்க்குள் அறிவாய் அதன் படர்க்கையிலே
திகழ்கிறது மனமாகத் தேடுவது எதை? எங்கே?”.
.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.