x

செப்டம்பர் 01 : அறிவென்னும் ஆயுதம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


அறிவென்னும் ஆயுதம் :
.

“சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சிவயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகி விடும். மனிதன் எப்போதும் தன் செயலால் எந்தச் சிக்கலையும் முடிவுக்கு கொண்டு வருவதில்லை. எங்கு ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ அங்கேயே, அதன் வேரிலேயே மற்றொன்று முளைத்துவிடும். மகளுக்குத் திருமணம் முடித்துவிட்டால் தனது கவலையெல்லாம் தீரும், என ஒருவர் எண்ணுவார். ஆனால், மணம் முடிந்த பின்னர் எத்தனைச் சிக்கல்கள் எழுகின்றன. வீடு ஒன்று கட்டிவிட்டால், இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிவிட்டால் இதுபோன்றே ஏதோ விரும்பியதை அடைந்து விட்டால் வாழ்வில் கவலைகள் தீரும் என்று கற்பனை செய்து கொள்வோம். அனால், உண்மை என்ன? எதை முடிப்பதாக எண்ணுகிறோமோ அங்கேயே இன்னொன்று தொடங்கி விடும். அதிலிருந்து பல கவலைகள் கிளைவிடுவதும் உண்டு.
.


எல்லாச் சிக்கல்களும் முடிவு இயற்கையிலேதான் உண்டு. ஒவ்வொரு சிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்து தேர்ந்த அறிவேயாகும். அத்தகைய அறிவு எல்லோரிடம் இருக்கிறது. அதைத் தூண்டி, அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு கவலைகளை ஒழித்து வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் பெறுவோம்.”
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * *
.
“உலகில் பல அறிவறிந்த பெரியோர் தோன்றி
உண்மை நெறி பரப்பியுள போதும் இன்று
நில உலகில் எங்கணுமே அமைதியில்லை ;
நேர்மையினால் வந்த பலன் என்னவென்று
சில அன்பர் வினவுகின்றார் சிறுமை அந்தோ.
சீரழிந்த காரணமோ அறிஞர் சொன்ன
நல உரைகள் வழிகடமை மதித்திடாமல்
நடப்பதனின் விளைவாகும் சிக்கல்களெல்லாம்!”
.

உயர் வாழ்க்கைக்கு வழி:

“எண்ணிறந்த மதங்கள் உண்டு மனிதருக்கு
எனினும் தெய்வம் என்பதொன்றேயாகும்
நுண்ணி ஆராய்ந்தறிந்த அறிஞர் செய்த
நூல்கள் எல்லாம் மனிதர் தங்கள் முயற்சியாலே
எண்ணத்தைத் தியானத்தால் பண்படுத்தி
எங்கும் நிறை பூரணத்தின் தன்மைகண்டு
மண்ணுலகில் ஏழ்மை, பஞ்ச பாதகத்தை
மாற்றி உயர்வாய் வாழும் வழியைக் காட்டும்!”.
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!