வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
வேதாந்தம் - சித்தாந்தம் :
“தத்துவ ஞானியின் வாய் மொழியாகவோ அல்லது நூல் வழியாகவோ ஞான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது. முறையான அறிவுப் பயிற்சியும் வேண்டும். அக நோக்குப் பயிற்சி என்னும் உள்ளொடுங்கு பயிற்சியின் மூலம் அறிவை உயிரில் ஒன்றைச் செய்து, உயிரே தனது அடக்கத்தில் தன் மூலமான மெய்ப் பொருளாக மாறி நிற்கும் தன்மையை அனுபோக பூர்வமாக பெற்றாக வேண்டும்.
தானே அவனாகவும், அவனே தானாகவும் – சிவனே சீவனாகவும், சீவனே சிவனாகவும் இருக்கும் நிலையை உரைமூலம் கேட்டு அறிவதோடு, மனதைப் பழக்கி, அந்த மனதின்னுள்ளேயே செலுத்தும் தவத்தின் மூலமாகவும் உணர்ந்து பார்க்கும் போது தான், தெளிவோடு திருப்தியும் வரும். இதை நமது மனவளக்கலை மூலம் சாதிக்க முடிகிறது.
தோற்றங்களெல்லாம் பஞ்சபூதக் கூட்டென்றும், பஞ்ச பூதங்கள் அணுவின் திரட்சி வேறுபாடென்றும், அணு இறைநிலையின் இயக்க நிலையென்றும் விளக்கம் சொல்வது “வேதந்தமாகும்”. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உயிர்கள் அனுபோகம் பெறுவது இன்பம் துன்பம் இரண்டு தான் உண்டு. அந்த இன்ப துன்பங்கள் உணரப் பெறுவது மனதிலே, ஆராய்ச்சியில் உயிரே மனமாகவும், இறைவனே உயிராகவும் இருப்பதைக் கண்டு அந்த இறைவனே நானாகவும் எல்லாமாகவும் இருக்கிறான் என்று சொல்வது “சித்தாந்தமாகும்”. துன்பத்தின் காரணத்தை அறியாதாரும் துன்பத்தைத் தோற்றுவிக்காமல், இன்பம் மட்டுமே விளையத்தக்க வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் விதமாக இன்ப துன்ப இயல்பறிந்தோர் வகுத்த வாழ்க்கை முறையே “பக்திமார்க்கம்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * *
மகரிஷியின் மணிமொழிகள் :
“வேதாந்தி சித்தாந்தியானாலன்றி
வீடுபேறு கிட்டாது வெற்றுப்பேச்சால்
வாதாடி வாழ்நாளைக் கழிப்ப தல்லால்
வந்துலகில் பிறந்த பயன் வழுக்கிப்போகும்”.
சித்தாந்தம், வேதாந்தம் :
“இயற்கையின் ஆதிநிலை பிரம்மம் தெய்வம்,
இயக்கநிலை அணுமுதலாய் அண்ட பிண்டம்;
இயற்கையின் உணர்வுநிலை அறிவு ஆகும்.
இம்மூன்றைப் பிரித்துப் பேசும் சித்தாந்தம்;
இயற்கையே அனைத்துமாய் உள்ளதென்று
எடுத்துரைக்கும் வேதாந்தம்; வெவ்வேறல்ல.
இயற்கைஎது? நான்யார்? என்றகத்தே நோக்க
எண்ணியவன் ஒடுங்கும்போது இரண்டும் ஒன்றே”.
மும்மார்க்கங்கள்:
“விண்ணாட்டம் வரை ஆர்வம்மீறிக் கண்ட
விளக்கமே ‘வேதாந்தம்’. சுகதுக்கத்தை
உண்ணாட்டத்தால் ஆய்ந்தோன் ஒடுங்கி மோனம்
உணர்ந்த நிலை ‘சித்தாந்தம்’. அறிஞர் அன்பால்
கண்ணாட்டத்துடன் நின்று இன்பதுன்பக்
காரணமே அறியாதோர் உயர்வாழ்வெய்த,
எண்ண ஓட்டம் செயல் இவற்றை ஒழுங்கு செய்ய
எடுத்துரைத்த முறைகள் எல்லாம் ‘பக்திமார்க்கம்'”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஏப்ரல் 29 : அறிவாட்சித் தரம்
PREV : ஏப்ரல் 27 : இல்லறத்திலேயே ராஜயோகம்