x

ஏப்ரல் 15 : அறிவே சிவம், சிவமே அறிவு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

அறிவே சிவம், சிவமே அறிவு:

இந்த ஆப்பிளை எடுத்துக் கொள்வோம். ஆப்பிள் என்பது என்ன? இறைவன் என்பது யாது? கண் புலனாகப்பார்க்கக் கூடிய ஆப்பிள். அந்தக் காட்சி கடந்தால் விஞ்ஞான அறிவுக்குப் போகையில் அணு. அதற்கு மேல் விஞ்ஞான அறிவுக்குப் போகும்போது இந்த அணு என்பதாக ஒன்றும் இல்லை. எல்லாம் வல்ல இறைவனே இயங்குநிலையில் அணுவாக இருக்கிறான்; கூடிய நிலையிலே ஆப்பிளாக இருக்கிறான்.

ஆப்பிளிலே இப்போது சிவத்தைக் காண்கிறோம். சிவமே, பிரம்மமே, மெய்ப்பொருளே, தெய்வமே அசைவிலே அணுவாகி, அணுக்கள் கூட்டிலே ஆப்பிளாகக் காட்சியளிக்கிறது. இப்போது ஆப்பிளிலே நாம் இறைநிலையைக் காண்கிறோம். அது மாத்திரமா?எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் இந்த மூன்று உண்மைகளை ஒரே நேரத்தில் பார்க்கக்கூடிய பழக்கம் இன்றிலிருந்து வைத்துக் கொள்ளுங்கள். “எப்பொருள் எத்தன்மையாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிது”.

பொருள், தோற்றம் இரண்டும் ஒன்றுதான். ஒரு பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஒரு மனிதனை, ஒரு மிருகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், உருவத்திலே தான் பேனா, மனிதன், மிருகம். ஆனால் அதைக் கடந்து விண்ணரிவுக்குப் போனால் அணு, அணுவைக் கடந்து போனால் சிவம். அந்த மூன்றாவது படிக்குப் போய்விட்டால், எந்த பொருளுமே சிவம்தான், இறைநிலையே தான், இறைவனே தான். அசைவிலே அணுவாகி, கூட்டிலே காட்சியாக இருக்கிறான்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

 

“மணியின் ஓசை போல..

பூவின் மணம் போல..

நெருப்பிலே வெளிச்சம் போல..

உயிரின் ஆற்றலே, நம் ‘அறிவாக’ விளங்குகிறது”.

சுழல் அலை – விரிவு அலை :

“உயிராற்றல் என்பது விண் ஆகாசம் ஆம்;

உட்பொருளாய் உள்ளசிவம் அறிவு உண்மை;

உயிராற்றல் பரமாணு சுழல் அலை ஆம்;

ஒரு தொகுப்பில் கோடான கோடி கூடி

உயிராற்றல் தற்சுழலோடு இயங்கும்போது

உண்டாகும் விரிவு அலைசீவகாந்தம்

உயிர் அலைகள் புலன்கள்வழி செல்லும் போக்கை

உண்மைசிவம் உணர்வதுவே மனம் ஆம்காணீர்”.

ஒன்றுக்கு பெயர்கள் பல :

“ஒன்றுமிலா ஒன்றரிந்தேன் விளக்கிக் காட்ட

உவமையில்லை எனினும் ஒருவாறு சொல்வேன்;

என்றுமே மாறாத இயற்கை ஈது,

எங்கும் நிறைவாயுளதால் சிவமாம் என்றும்


நின்றும் நிலைத்தும் மற்ற தோற்றமெல்லாம்

நிலைக்க விடாது இயக்குவதால் சக்தியாகும்

இன்று இந்தச் சரீரத்தில் இரத்த ஓட்டம்

இருக்குமட்டும் நான் என்னும் அறிவு மாகும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஏப்ரல் 16 : வாழ்க வளமுடன்

PREV      :  ஏப்ரல் 14 : இன்ப ஊற்று

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!