இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
இன்ப ஊற்று:
என்னிடம் ஒரு முழுமையான ஆற்றலோடு எல்லாம் வல்ல இறைவன், என்னைப் படைத்திருக்கிறான், பக்திமானாக இருந்தாலும் ஞானவானாக இருந்தாலும் அவனுடைய பிரதிநிதியாகவே, அவனுடைய பகுதியாகவே தான் இருக்கிறேன். பேராற்றல் என்னிடம் அடங்கி இருக்கிறது. இதைக் கொண்டு என்னென்ன நலம் கொள்ள வேண்டுமோ அதை நானே விளைவித்துக் கொள்வேன். பிறருடைய உதவி தேவையான இடத்திலே அவர்களுக்கு உதவி செய்து அந்த உதவியை நான் பெறுவேன் என்ற அளவிலே உதவுபவர்களுக்கெல்லாம் நாம் பதில் செய்து கொண்டிருப்பேன் என்ற அளவிலே, கடமை உணர்வோடு நின்று பாருங்கள். பெரிய சக்தி வாய்ந்த ஒரு ஆற்றல் உங்களிடம் பெருகிவிடும். தினந்தோறும் அதைப் பயன்படுத்துங்கள்.
நீங்கள் ஒரு அதிகாரியாக இருக்கலாம். உங்கள் அதிகாரத்தின் கீழ் ஆயிரமாயிரம் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கக்கூடும். நீங்கள் இந்தப்புறம் திரும்பி நாம் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று எண்ணிவிட்டீர்களேயானால் அத்தனை ஆயிரம் மனிதர்களும் அவர்களின் தேவைகளும் நேரடியாக உங்களுக்குத் தெரியத் தொடங்கும். அதைச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால் அவ்வாறு செய்யச் செய்ய இன்ப ஊற்று தான் மனதிலே வளரும். தெய்வத்தோடு தெய்வமாகவே நிற்கும் ஒரு நல்ல காட்சி உள்ளத்தில் ஏற்படும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்
நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்”.
“நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம், இந்த உடல்
சமுதாயத்தின் சொத்து, அதனைக் கெடுப்பதற்கு
நமக்கு அதிகாரம் இல்லை”.
இறையுணர்வில் எழும் பேரின்பம்:
“இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே
ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன்;
நன்மை தரும் நவ கோள்கள் நட்சத்திரக் கூட்டம்
நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்;
உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்
உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல்;
தன்மயமாய்த் தான் அதுவாய்த் தவறிடாதியக்கும் உன்
தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஏப்ரல் 15 : அறிவே சிவம், சிவமே அறிவு
PREV : ஏப்ரல் 13 : வினைப்பதிவின் கருவி