x

ஏப்ரல் 12 : உயிர் வழி அறிவு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


 

உயிர் வழி அறிவு :
(Soul Consciousness or energy Consciousness)

“மனம் தனது மூலம் நோக்கி நிற்கும் அக நோக்குப் பயிற்சியால் தனக்குப் பிறப்பிடமான உயிர் நிலையை [உயிராற்றலை] அதன் இயக்கத்தை உணர்கின்றது. உயிரை நெருப்பாகக் கொண்டால், மனதை வெளிச்சமாகக் கொள்ளலாம்.

இது போல உயிரே படர்க்கையில் மனமாக இயங்குகிறது, உயிர் “நான்” என்னும் அகங்காரமாகவும் அதன் படர்க்கைச் சிறப்பே மனம் என்றும் உணர்ந்து, அவ்வாறு விளங்கிய ஒன்றுபட்ட உணர்வு நிலையில் அறிவை விரித்து உயிராக உடலில் இருக்கும் இயங்கும் உணர்வு ஆற்றல் விண் எனும் நிலையில் பேரியக்க களமாகவும், காணும் பல பொருட்களில் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக எழும் இயக்க ஆற்றலாகவும், பிராணிகளிடத்தில் இன்ப துன்பம் உணர் உயிராகவும் இயங்கும் உண்மை அறிவுக்கு உண்டாம்.

இயக்க ஆற்றலான உயிர் அணுக்கள் [பரமாணுக்கள்] ஒன்றாகக் கூடி இணைந்து திரட்சி பெற்று உருவங்களாகி மீண்டும் ஒவ்வொரு உருவத்திலும் ஊடுருவி நிறைந்து அதனதன் தன்மைக்கேற்ப அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், எனும் அறுவகையில் ஒன்றாகவோ, பலவாகவோ சிறப்புற்று இயங்கும் மறைபொருள் விளங்கும். இந்த உயிர்நிலை விளக்கத்தில் விழிப்போடு உலகைத் துய்க்கும் இன்ப துன்ப இயல்பறிந்து உயிர்கட்குக் கடமை செய்து இனிமையாற்றி வாழும் அறிவே உயிர்வழி அறிவு. இவ்வறிவு நிலையில் தான், ஒழுக்கம், கடமை, ஈகை மூன்றும் இணைந்த அறநெறி இயல்பாக உண்டாகிறது.

உயிர் = Spirit; அறிவு = Knowledge.
உயிர் வழி அறிவு = Spiritual Knowledge.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

அகத்தவத்தின் பெருமை:

“உயிருணர்வே ஆன்மாக்கள்

உய்யவழி காட்டும்.

உள்நாடி அமைதிபெற

உண்மை தெளிவாகும்”.

“உயிர் தனது மெய்யுணர ‘சமத்துவம்’ ஆம்.

உயிர் விரைவின் பயன்துய்க்க ‘ரஜோகுணம்’ ஆம்.

உயிர் பரவிக் கெடும் தீமை ‘தமோகுணம்’ ஆம்.

உயிர் தனது முக்குணத்தை உணர ஞானம்”.

“உயிர் உடலில் தொடர்ந்தியங்க உணர்ச்சி தோன்றும்.

உணர்ச்சியோ தொடர் நிகழ்ச்சி பலவாய் மாறி,

உயிர் சிறக்க அம்மலர்ச்சி மனமாய் ஆற்றும்.

உணர்ச்சியே அறிவிற்கு முதல் நிகழ்ச்சி.

உயிர் என்றால் உணர்ச்சிநிலைப் பிண்டம் என்றாம்.

உணர்ச்சியில்லா நிலையில் உயிர் விண்தான் தேர்வீர்.


உயிர் உணர்ச்சி உள்ளொடுங்கத் தவம். பரத்தில்

உணர்வு லயமாகி நின்றால் வீடு பேறு”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஏப்ரல் 13 : வினைப்பதிவின் கருவி

PREV      :  ஏப்ரல் 11 : வாழ்க்கைத் துறைகள்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!