x

ஏப்ரல் 11 : வாழ்க்கைத் துறைகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


 

வாழ்க்கைத் துறைகள் :

சுகாதாரம் :

“உடலின் உற்பத்தி, இயக்கம், வளர்ச்சி, தளர்ச்சி என்ற இவைகளிலும், கருவமைப்பு, ஆகாரம், செயல்கள், எண்ணங்கள் என்ற இவைகளினாலும், வெட்ப தட்ப தாக்குதல், சந்தர்ப்ப மோதல் என்ற இவைகளாலும், நம் உடலிலுள்ள ரசாயனங்கள் மாற்றமடைகின்றன. இவைகளால் நம் உடல் ரசாயனங்கள் அளவிலும் செறிவிலும் குறைந்து விடுகின்றன; அல்லது அதிகரித்து விடுகின்றன.

அவைகளால் ரத்த ஓட்டச் சுழலின் தன்மையும், அதனால் ஏற்படும் உடலியக்க அறிவியக்க நிலைகளும் மாற்றமடைந்து விடுகின்றன. இத்தகைய மாற்றங்களைச் செயற்கை முறைகளினால் தகுந்தபடி சமநிலைக்குக் கொண்டுவரும் முயற்சியே மருத்துவமாகும். அளவுக்கு மிஞ்சி ஏற்பட்டிருக்கும் ரசாயன அதிகரிப்பையும், இரத்த ஓட்டத்தையும், அழுத்தத்தையும் அளவுக்குக் குறைந்துபோன ரசாயனக் குறைவையும், இரத்த ஓட்ட தளர்ச்சியையும் – மருந்து, உணவு, பட்டினி, நீராடல், ஓய்வு, உடற்பயிற்சி முதலியவற்றால் சமநிலைக்குக் கொண்டு வரும் முயற்சியே சுகாதார முறை எனப்படும்.

பொருளாதாரம் :

மனிதர் வாழ்வதற்கு அவசியமான உணவு, இடம், உடை முதலியவைகளையும், இயற்கையில் ஏற்படும் துன்பங்களை எதிர்க்கும் பல வசதிகளையும், உற்பத்தி செய்தல், சேமித்தல், பாதுகாத்தல், நிரவுதல், அனுபவித்தல் என்பன எல்லாம் சேர்ந்த ஒன்றே பொருளாதாரம் எனப்படும்.

அரசியல் :

பொதுவாக எல்லோருக்கும் வாழ்க்கையின் இன்பத்தைப் பாதுகாக்கவும், அதிகரிக்கவும், துன்பத்தைக் குறைக்கவும் – போக்கவும், திட்டமிட்டுச் செயலாற்றவும், தனி மனிதனால் ஆகாத காரியத்தைப் பலரின் சக்தி கொண்டு நிறைவேற்றவும், பலமுடையான் பலமில்லானைத் துன்புறுத்தாதபடி பாதுகாக்கவும், ஏற்படுத்திக் கொண்ட கூட்டு வாழ்க்கை ஒப்பந்தமே – கட்டுப்பாடு விதிமுறைகளே அரசியல்.

விஞ்ஞானம் :

விண் என்றால் அணு. ஞானம் என்றால் அறிவு. விஞ்ஞானம் விண் + ஞானம் அணுவின் தத்துவம் அறிந்து கொண்ட அறிவின் தெளிவே விஞ்ஞானம். அணுவையும் அணுவின் தத்துவத்தையும் அறிந்தால், அணுவில் உள்ள எழுச்சி கவர்ச்சி எனும் சக்தியை அறியலாம், அணுக்கள் ஒன்றுடன் ஒன்று, பலவுடன் பல கூடுவதால் உருவங்களும் அவற்றில் காந்த சக்தியும் ஏற்படுகின்றது. அக்காந்த சக்தியே ஒலியாய், ஒளியாய், வெட்பதட்ப மாறுபாடுகளாய், குவிதல், பரவுதல், கவர்தல், விலகுதல், கூடுதல், பிரிதல் என்னும் பல்வேறு இயக்கங்களாகி, அதன் விளைவாக ஒவ்வொரு பொருளிலும் ரசாயனம் தோன்றி கூடி – குறைந்து – மாறி உருவங்களாய், உலகங்களை, உலக கோள்களாய், பொருட்களை, ஜீவராசிகளாய் உருவாகி இருக்கும் இயல்பறிந்து கொள்வதே விஞ்ஞானம் எனப்படும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

“அஞ்ஞானமோ அறிவினது ஆரம்ப நிலையாகும்.

விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை”.

“இயற்கை சக்தியே விதி.

இதை யறிந்த அளவே மதி”.


“அறிவு, சுகம், பொருள்,

அரசியல், விஞ்ஞானம்

ஐந்து தத்துவங்கள்

அறிந்தவன் பெரியோன்”.

“வாழ்க்கையே அறிவு உடல் நலம் பொருட்கள்

விஞ்ஞானம் அரசியல் இவ்வைந்தில் ஆகும்;

வாழ்க்கையிலே இவ்வைந்து தத்துவத்தின்

வகையறிந்தோர் மனிதஇனம் அன்பாய்ச் சேர்ந்து

வாழ்க்கை இன்ப நலம்துய்க்க அறிவில் தேற

வறுமை ஐந்துபழிச் செயல்கள் ஒழிந்து வாழ

வாழ்க்கை ஒழுக்கங்கள் பல கற்பித்தார்கள்;

வந்த பயன், இன்றைய நிலை, கணித்துத் தேர்வோம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஏப்ரல் 12 : உயிர் வழி அறிவு

PREV      :  ஏப்ரல் 10 : அறிவு, உடல் ஆற்றல்களைப் பயன்படுத்தல்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!