x

ஏப்ரல் 06 : எண்ண அலைகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


 

எண்ண அலைகள் :

இயற்கையை உணர்ந்து அறவழி ஒழுகி அறியாமையை தூய்க்கவல்ல ஒரு மதிப்புள்ள உயர் மனிதனாக இருந்தும் தன் தகைமையும் இயற்கையாற்றலின் இயக்க நியதியும் அறியாமல் மனிதன் தனது எண்ண ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். தன் தேவை தற்கால இன்பம் என்ற அளவில் குறுகி உணர்ச்சி வயமாகி பிறர்க்கும் பிற்காலத்திற்கும் தீமை விளைவும் வகையில் செயல்புரிகிறான். பிறரை தாக்கி தீமைவிளைவிக்கும் எண்ண அலைகளை பரப்பிக் கொண்டே இருக்கிறான். தன் குடும்பம், சமுதாயம், வேறுநாட்டு மக்கள் இவர்கள் மேல் சினம், வெறுப்பு, பகைகொண்டு அவன் எண்ண அலைகளை எப்போதும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறான்.

இவ்வெண்ண அலைகள் அணு ஆற்றலாகவே பரவி மனித இன உடல்களிலும் மூளையிலும் பொருந்தா உணர்வு பதிவுகளாகவும் அமைகின்றன. இப்பதிவுகளை பாவப் பதிவுகள் என்றும் சாபம் என்றும் அறிவறிந்த முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்கு பகையாகி பொதுவாக சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொருவரும் பிறருக்குத் துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவதும், அதற்கு துணிந்து செயல்புரிவதும், பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கின்றேன். அதன் விளைவு என்னவாகும்? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன.

மனிதன், மனிதனின் மதிப்பை உணர்ந்து பிறர்க்குத் துன்பமளிக்காமலும், இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

“உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்

எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும் “.

எண்ணமும் செய்கையும்:

“எண்ணு சொல் செய் எல்லோர்க்கும் நன்மை தர

எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு”.

வாழ்க்கையை ஆக்கும் சிற்பி:

“எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி

எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்”.

நன்மையே நோக்கு:

“எண்ணம் சொல் செயலால் எவருக்கும் எப்போதும்


நன்மையே விளைவிக்க நாட்டமா யிரு”.

“பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு

எழும் ஒரு ஒலியே ‘வாழ்த்து’ என்ற வார்த்தையாகும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : ஏப்ரல் 07 : சீர்திருத்தமே வாழ்வின் வளம்

PREV      : ஏப்ரல் 05 : உயிர்ச்சக்தி எந்தெந்த வகையில் இந்த உடலால் செலவழிக்கபடுகிறது ?

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!