x

ஏப்ரல் 05 : உயிர்ச்சக்தி எந்தெந்த வகையில் இந்த உடலால் செலவழிக்கபடுகிறது ?

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


 

உயிர்ச்சக்தி எந்தெந்த வகையில் இந்த உடலால் செலவழிக்கபடுகிறது ?

1) இந்த உடலும் உயிரும் இணைந்து இயங்கும் காரணத்தால் இயற்கையாக மனிதனுக்கு ஏற்படுகின்ற பசி, வெட்ப தட்ப ஏற்றம், உடல் கழிவுப் பொருட்களின் உந்து வேகம் என்ற வகையில் ஏற்படும் தேவைகளை காலத்தோடும் முறையோடும் தக்க பொருட்களைக் கொண்டு நிறைவு செய்து கொள்வதற்கு உயிர்ச்சக்தி அளவோடு செலவு செய்யப்படுகிறது.

2) அறிவானது புலன்களைக் கொண்டு செயலாற்றும் போது உயிர்ச்சக்தியானது சந்தர்ப்ப சூழ்நிலைக் கேற்றவாறு எழுச்சியாகி உடலில் ஊறுதல் உணர்ச்சியாகவும் கண்களில் ஒளியாகவும், நாவில் ருசியாகவும், காதுகளில் ஒலியாகவும், மூக்கில் வாசனையாகவும் செலவாகிக் கொண்டே இருக்கிறது.

3) இந்த மாற்றத்திற்குத் தேவையான முறையிலும் அளவிலும் உடல் காந்த சக்தியாகவும் இரசாயன சக்தியாகவும், உணர்தல் சக்தியாகவும் மாற்ற மூளையின் நுண்ணியக்கத்தின் மூலம் உடலிலே உள்ள பல கோடி பேரணுக் கோளங்களில் கபாட இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த முறையிலும் ஓரளவு உடல் காந்த சக்தி செலவாகிறது.

4) கொள்ளும் இயக்கமாகவும், தள்ளும் இயக்கமாகவும் உடல் முழுவதும் நடைபெறுவதால் ஓரளவு உயிர்ச் சக்தி செலவாகிக் கொண்டு இருக்கிறது.

5) எண்ணம், சொல் செயல்களினால் ஜீவன்பெறும் மாற்றுத் தன்மையால் பேராசை, சினம் கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால்கவர்ச்சி, வஞ்சம் என்ற ஆறு குணங்களின் வழியாகவும் பழக்க வழக்க ஒழுக்கங்களினாலும் உயிர்ச் சக்தி செலவழிக்கப்படுகிறது.

6) மிதமிஞ்சிய போகம், ஆகாரம், பேச்சு உழைப்பு, வெட்ப தட்ப தாக்குதல் இவைகளாலும், நோயாளிகள், தீய குணமுடையோர், வீட்டு விலக்கான பெண்கள் இவர்கள் ஸ்பரிசமும், கற்பொழுக்கத் தவறுதலாலும் உயிர் சக்தியானது ஒவ்வொரு அளவில் அதனதன் அளவுக்கு ஏற்ப செலவழிக்கப்படுகிறது.

7) கவலை, கோபம், பொறாமை, பயம், பந்துக்கள் பாசம், பொருள் பற்று, பேராசை, காமம் முதலியன எண்ண இயக்கங்களால் உயிர் ஆற்றல் பெரும் அளவில் செலவழிக்கப்படுகிறது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

உயிர் நிலையறிய :

“கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை,

உண்ணாடிப் பார்க்க உணரலாம் உயிர் நிலையை”.

சச்சிதானந்தம்:

“உயிரின் இயக்கமே உணர்ச்சிகள் அனைத்துமாம்

உயிரின் உணர்தலே உள்ளமாம் அறிவிதே

உயிரின் ஒடுக்கமே வெளியெனும் உயர்வீடு

உயிரின் நிலைகளே உயர் சத்-சித்-ஆனந்தம்”.

பரம் – உயிர் – அறிவு:

“உணர்ச்சிகளில் அறிவியங்க உயிர்விளக்க மாகாது

உள்ளொடுங்க உயிர் உணர்வாம்; உயிர் ஒடுங்க தெய்வநிலை;

உணர்ச்சி உயிர் பரம் மூன்றும் உணரவழி அகத்தவமே;


உண்மை, உயிர், உலகு அறிவு உணர்பவனே மூன்றாவான்.”

உயிரறிய ஞானம்:

“உயிர் அறிந்தால் அறிவறியும் உண்மை தோன்றும்

உலகமெலாம் உயிருக்குள் இருக்கக்காணும்

உயிரறிந்த அறிவாலே உலகை நோக்க

உயர்வு தாழ்விலாத சமநிலை சித்திக்கும்;

உயிரறியா அறிவு நிலை மாயையாகும்

ஒப்பற்ற உயிரறிய ஞானமாகும்

உயிராயும் அறிவாயும், தெய்வமாயும்

ஒங்குமுயர் மறைபொருள் “நான்” உண்மை தேர்வோம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஏப்ரல் 06 : எண்ண அலைகள்

PREV      :  ஏப்ரல் 04 : வருமுன் காப்போம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!