x

ஏப்ரல் 03 : சினம் எழாத மனம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


 

சினம் எழாத மனம் :

வாரம் ஒருமுறை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு மணி நேரத்தில் அகத்தாய்வு (Introspection) செய்து ஆராய வேண்டும். சினம் தோன்றும் காரணம், சினத்தின் தீமை, சினத்தை ஒழிக்க எடுத்த முயற்சி, அடைந்த வெற்றியின் அளவு, இனியும் எடுக்க வேண்டிய முயற்சிகள் என்ற முறையிலே ஆராய வேண்டும். மீண்டும் சங்கற்பம், மீண்டும் வாழ்த்து என்று முயற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏன், ஒவ்வொரு கனமும் கூடத் தற்சோதனையாகவே இருக்க வேண்டும். “சென்ற கணம் நான் பேசியது சரியா? சென்ற கணத்தில் எனக்கு ஏற்பட்ட மனநிலை சரிதானா?”, என்று ஒவ்வொரு கணமும் சோதனையாகவும் ஆராய்ச்சியாகவும் கழிய வேண்டும். தவத்தினால் ஏற்பட்டிருக்கும் மனத்தின் விழிப்பு நிலை இந்த வழியில் பெரிதும் துணையாக இருக்கும்.

இவ்வாறு செய்துவந்தால் ஓர் ஆறு மாதங்களுக்குள்ளாக சினம் அழிந்து பொறுமையின் திருவுருவாகவே திகழலாம். சினம் எழாத மனம் பிரகாசமாக இருக்கும். சினம் அகன்ற ஒருவரிடம் அவர் மனைவியும், மக்களும் மற்றவர்களும் எவ்வளவு இனிமையோடும் அன்போடும் பழகுகிறார்கள். அவர் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதென்று கவனித்துப் பார்க்க வேண்டும். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வெற்றிமேல் வெற்றியாக எல்லாத் துறைகளிலும் பிரகாசிப்பார்கள்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * *

 

 

“தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொள்ளும் சினம்”. – திருவள்ளுவர்.

“சினம் மாண்டுபோக அருள் சேர்ந்திருப்ப தெக்காலம்” – பத்திரகிரியார்.

“அருளா! நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்

அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்”

– அருட்பிரகாசவள்ளலார்.

“சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே! யாவும்

சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே”

— இடைக்காட்டுச் சித்தர்.

“நாணத்தை கவலையினை சினத்தைப் பொய்யை

அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போதே சாவுமங்கே அழிந்து போகும்

மிச்சத்தைப் பின்சொல்வேன் சினத்தை முன்னே

வென்றிடுவீர்’ மேதினியில் மரணமில்லை”. – பாரதியார்.

“கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய் தந்தை

கோபமே குடி கெடுக்கும்,

கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது

கோபமே துயர் கொடுக்கும்…..

— சதுரகிரியார்.

கவலை சினம் ஒழிக்க வழி :

“சினம் கவலை என்னும் இரண்டும் மனிதர் வாழ்வைச்


சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்து கொள்வீர்

மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்

மதி நுட்பம் ஆராய்ச்சி குலைந்து போகும்

தினம் சிறிது நேரம் இதற்கென ஒதுக்கி

சிந்தித்துச் சீர் திருத்த இவ்விரண்டு –

இனமும் இனி என்னிடத்து எழாமல் காப்பேன்

என்று பல முறை கூறு; வெற்றிகிட்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஏப்ரல் 04 : வருமுன் காப்போம்

PREV      :  ஏப்ரல் 02 : கவலை இல்லை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!