வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
கவலை இல்லை:
“திறமையின்மை, அச்சம் இவையிரண்டும் கவலைகளைப் பெருக்கும் மன நிலைகளாகும். மனதின் விழிப்பு நிலை பிறழ்ந்த மயக்க நிலையும், இயற்கையின் ஒழுங்கமைப்பை அறியாமையும், எளிதில் தீர்வுகாணத்தக்க கூர்மை அறிவை வளர்க்கும் சிந்தனைப் பயிற்சியின்மையும் திறமையின்மையாகும். தவறான செயல்களின் விளைவைக் கண்டோ அல்லது தனது வாழ்வின் போக்கில் ஊறு விளைவுக்கும் என்று கற்பனை செய்து கொண்டோ துணிவிழந்து வருந்துதல் அச்சமாகும்.
கவலையால் உடல், உள்ள நலன்கள் கெடுகின்றன. ஏன்? வாழ்வே துன்பமாகவும் தோல்வியாகவும் அமைந்துவிடுகிறது. இதனை மனிதன் ஒழித்தேயாக வேண்டும். கவலையை ஒழிக்க வேண்டுமெனில் இயற்கையின் ஒழுங்கமைப்பை அறிய வேண்டும்; சிந்திக்கும் திறனைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை வேண்டும். முயற்சி வேண்டும். துணிவு வேண்டும்.
மாறாத இயற்கை விதிகளை உணர்ந்து கொள்ளல், சமுதாய ஒழுங்கமைப்பைப் புரிந்து மதித்து வாழ்தல், தன்னிலை விளக்கம் பெற்றுப் பிறவியின் லட்சியத்திற்கு ஒத்த இசைவான வகையில் வாழ்க்கை நடைமுறைகளை அமைத்துக் கொள்ளல் என்ற அறிவுடைமை வந்துவிட்டால் தானே சிக்கல்களைத் தோற்றுவித்துக் கொள்ளாத தகைமை கிடைக்கிறது. சிக்கல்கள் இல்லாமல் போகவே துன்பமுமில்லை கவலையுமில்லை என்றாகி வாழ்வே ஓர் இன்பச் சோலையாக மாறிவிடும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * *
“கவலை இல்லாத மனிதர்கள் உலகில் உண்டு;
ஆனால் ‘சிக்கல்’ இல்லாத மனிதர்கள் உலகில் இல்லை”.
“சிக்கல்களை சந்திக்க போதிய பலமில்லாத
மனநிலையைக் கவலை என்கிறோம்.”
“ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறி காத்து வாழும்
ஒரு தேர்ந்த ‘மனவளக்கலைஞனுக்கு – குண்டலினியோகிக்கு’
எவ்விதத்தும் கவலை வர வாய்ப்பே இல்லை. அத்தகைய
“அறிவுடைமையை” நாம் பெற்றாக வேண்டும்”.
“முறுக்கேறிய பஞ்சு நூலாகி வலுவடைவது போல
சிந்தனையாலும் உழைப்பாலும் பண்பட்ட உடலும் உள்ளமும் துன்பங்களைத்
தாங்க வல்லமையுடையவை ஆகின்றன.”
“கரு வளர வளர கருப்பையும் அகன்று
தேவைக்கேற்ப விரிவு அடைகிறது.
இது போல அறிவு வளர வளர அது –
செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் வசதிகளும்
பெருகிக் கொண்டே இருக்கும்”.
“கவலை யென்பதுள்ளத்தின் கொடிய நோயாம்
கணக்குத் தவறாய் எண்ணம் ஆற்றலாம்
கவலை யென்பதோ வாழ்வில் சிக்கல் கண்டு
கலங்கி மனம் திகைப்படையும் நிலைமையாகும்;
கவலை உடல்நலம் உள்ள நலன் கெடுக்கும்
கண் முதலாய்ப் பொறி ஐந்தின் வளம் கெடுக்கும்
கவலையினை முயற்சி சிந்தனை இவற்றால்
கடமையினைத் தேர்ந்தாற்றி வெற்றி கொள்வோம்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஏப்ரல் 03 : சினம் எழாத மனம்
PREV : ஏப்ரல் 01 : சிந்தனைத் திறன் வளர