வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
மனைவி நல வேட்பு நாள் :
“உலகில் இதுவரை தந்தை நாள் (Father’s day), தாயார் நாள் (Mother’s day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள். மனைவி நல வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா ? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது.
இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆவது நாளை மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.
“பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.