x

ஆகஸ்ட் 26 : சிவயோகம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


சிவயோகம்:

பிற உயிர் உணரும் இன்ப துன்ப இயல்பினைக் கூர்ந்து உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நுட்பமும், அப்படி உணர்ந்து கொண்ட பிறகு அதற்கு இறங்கி உதவும் ஒரு திருப்பமும் மனிதனிடத்து வந்து விடுமேயானால் மனிதனுடைய மனதிலே அறவுணர்வு என்னும் தெய்வீக உணர்வு கிட்டும். பிறருடைய துன்பத்தை நீக்க வேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுகிறதல்லவா? அதுதான் உறவு அந்த உறவை, உண்மையான உறவைப் பிறரோடு கொண்டபோது அதிலிருந்து சேவை மலர்கிறது.

அறிந்தது சிவம். காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது; அது செயல்படும்போது அன்பாக மலர்ந்தது. அப்பொழுது அன்பு என்பது என்ன என்று பார்க்கும் போது “சிவத்தின் செயலே” எனத் தெரியவரும். செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் தன்மை.

ஆகவே நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அனைவரோடும் உறவு கொண்டு கடமையாற்றி வந்தால் அதுவே சிவயோகம். எந்தப் பொருளிலேயும் சிவனைக் காணலாம். எந்த நிலையிலேயும் சிவனாகவே இருக்கலாம். எந்தப் பொருளிலேயும் சிவனைக் காணலாம். சிவனோடு உறவாக இருக்கலாம்; உறைந்து இருக்கலாம். உடலால் வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால், அறிவால் இறைவனோடும் உயிர்களோடும் ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம். இந்த நிலைக்கு அறிவை உயர்த்தவல்லது, தவமும் அகத்தாய்வும் தான்.


– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

சிவத்தை அறியும் அறிவு:

“சிவம் என்னும் பூரணத்தை வெளியென்றே உணர்வீர்;

சிறப்பான அதன் இயக்க ஆற்றல் அறிவாகும்;

சிவத்தினிட முதல் இயக்கம் சீர்மை பெற்ற விண்ணாம்;

சித்தரெல்லாம் சத்தியென்றார்; அந்தச் சத்திக்குள்ளே

சிவமமர்ந்து விளையாடும் சிறப்பதே பேரண்டம்;

சிற்றுருவாய் பிறப்பிறப்பு இடை வாழ்வதுவே உயிர்கள்;

சிவமறியும் பேரறிவைப் பெற்றவனே மனிதன்;

சிந்தனையால் உணரும்வரை சிதறும் மனம் மாயை”.

அறிவு ஒன்றே:

“புத்தனென்ற பெரியாரும் இயேசுநாதர்

பொது நோக்கில் கவி புனைந்த திருவள்ளுவர்

உத்தமராம் நபிகள் எனும் உயர்ந்த ஞானி

உண்மைக்கே உயிரளித்த சாக்ரடீஸ்

நித்தியமாம் நிலையறிந்த ஞானியர்கள்

நிலஉலக மக்களுக்கு எடுத்துச் சொன்ன

அத்தனையும் சேர்த்து ஒரு தொகுப்பாய்ச் செய்தால்

அனைத்துமிணைந்து ஒரு கருத்தாய் அமையக்காண்போம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!