x

ஆகஸ்ட் 25 : சமுதாயத் தொண்டு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


சமுதாயத் தொண்டு :

“இளமை நோன்பு, இல்லறம் இரண்டையும் முறையாக ஆற்றியதால் பொருள், இன்பம் எனும் இரு பிரிவுகளைப் பற்றி அனுபவ அறிவு கிடைத்துவிட்டது. இந்த இரண்டும், உடலையும், அலைந்து திரியும் மனதையும் பற்றிய அனுபவ அறிவு ஆகும். மேலும் உயிர், மெய்ப்பொருள் என்னும் இரண்டு மறைபொருட்கள் மனிதன் என்ற இயக்க நிலையத்தில் அடங்கியுள்ளன. இவற்றையறிந்தால் தான் மனிதன் அறிவு முழுமையாகும். அதற்கு ஆசான் மூலம் உயிர்நிலை உணர்ந்து, அதன் மேல் மனதைச் செலுத்தி அகநோக்குப் பயிற்சியால் உயிரின் இருப்பு, இயக்கம், விளைவுகள் பற்றிய அறிவைப் பெறும் காலமே வானப்பிரஸ்தம் எனும் அகத்தவப் பயிற்சிக் காலம். அகத்தவத்தால் அறிவு முழுமைபெற்று விட்டது. இயற்கையைப் பற்றிய முழு விளக்கமும் வாழ்வின் வளம், நெறிமுறைகள் பற்றியும் அனுபவமான அறிவும் கிடைத்துவிட்டது.


மேலும் அவன் வாழ்நாள் முழுவதும் ஆற்றவுள்ள கடமை என்ன? தன்னை உருவாக்கி வாழவைத்த சமுதாயத்திற்கு உடல் ஆற்றலையும் அறிவின் விளக்கங்களையும், அர்ப்பணித்து சமூகத் தொண்டு ஆற்ற வேண்டும். பழம் பழுத்து விட்ட பின் மரத்திலிருந்து விடுபட்டு வேறுபடுவதைப் போல, குடும்பம், பொருளுடைமை என்ற இரண்டு சிற்றெல்லைகளிலிருந்து பற்றுக்களை விட்டு மனிதன், இயற்கை, உலகம் என்ற விரிந்த பற்றோடு வாழ்கிறான். இந்தப் பொருள், மக்கள் என்ற உரிமை காட்டும் செயல்களுக்குப் பதிலாக விரிந்த மனத்தோடு உலக மக்கள் அனைவருக்கும் தன்னை உரிமையாக்கி அவன் அறிந்த அறிவின் முழுமைப் பேற்றின் விளக்கங்களை மக்களுக்குப் போதிக்கும் சமுதாயத் தொண்டினைச் செய்து வாழ்கிறான்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

தொண்டில் உயர்வு தாழ்வு வேண்டாம் :

“அருள்துறையில் சத் சங்கம் நடை பெறுவதென்றால்

அவரவர்கள் இயன்றவரை தொண்டாற்ற வேண்டும்,

பொருளுடையோர் பொருள் தரலாம் அவர் விரும்பும் அளவில்,

பொதுச் சொத்தே அருள்நாட்டம் கொண்டவர்கட் கெல்லாம்;

அருள் மனத்தால் ஒருவர் பிறரை அடக்கி ஆளும்

ஏற்றத்தாழ் வெதுவும் சத் சங்கங்கட் கொவ்வா;

உருள்உலகில் உருண்ட சங்கம் ஆயிரமாயிரமாம்

உட்பகையால், உண்மை கண்டு நல்லனவே செய்வோம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!