x

ஆகஸ்ட் 20 : பஞ்சபூத அறிவு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


பஞ்சபூத அறிவு :

“பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு என்று சொன்னால் அது பஞ்ச பூதங்களின் தன்மையை உணர்ந்து கொள்வது தான். ஏனென்றால் எப்படிப் போனாலும், பஞ்சபூதங்களையும் அதிலிருந்து வரக்கூடிய விளைவுகளையும் தவிர வேறொன்றையும் மனிதன் அறிவது இல்லை. ஆகையினாலே இவைகளையெல்லாம் அறிந்து கொள்வதற்கு வேண்டிய சங்கற்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். காப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே நமது மனதை ஏற்பு சக்தி வாய்ந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஐந்து பௌதீகப் பரிவுகளிடையேயும் நமது அறிவையும், மனத்தையும், ஜீவகாந்த சக்தியையும் செலுத்தி நமக்கு வலுவைத் தேடிக் கொள்கின்ற தவமே பஞ்சபூத தவம்.

எனவே நமது மனதை ஒழுங்குபடுத்தி, அதற்கான ஒரு பயிற்சி மூலம் ஒவ்வொரு பூதத்தோடும் ஒன்றி ஒன்றி நின்று உயிர்காப்பைச் சரியான முறையிலும் அளவிலும் பெற்றுப் பழகி கொண்டால், வாழ்க்கையில் பஞ்சபூதங்களான பொருட்களோடும் உயிர்களோடும் தொடர்பு கொள்ளும் போது உயிர்க்கலப்பு பெறும்போது அந்த உயிர்கலப்பு முழுமையாகவும் சரியானதாகவும் வெற்றியும் இனிமையும் தரத்தக்கதாகவும் அமையும்.

இந்தப் பயிற்சியால் பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றோடும் முறையாக முழு அளவில் ஏற்ற சங்கற்பக் கருத்துக்களோடு உயிர்க்கலப்புப் பெற்றுப் பெற்று பக்குவம் அடைந்த மனமானது, இந்த அனுபோகத்திலும் சலிப்போ வெறுப்போ தோல்வியோ ஏற்காத பக்குவத்தைப் பெறுகிறது. இனிமையைக் காத்துக் கொள்ளும் திறமை பெறுகிறது. அத்தகு மனத்தினால் எந்தப் பொருளோடும் இணைய முடிகிறது. எந்தச் சக்தியோடும் இணைந்து பயன்கொள்ள முடிகிறது. அந்தப் பொருளால் அல்லது சக்தியால் விளையக்கூடிய பாதகங்களில் இருந்தும் காப்பு பெற முடிகிறது. அந்தப் பொருள் மற்றும் சக்தி பற்றிய முழு விளக்கத்தையும் தெளிவையும் பெறவும் பயன் கொள்ளவும் முடிகிறது.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

வீடுபேறு:

“வெட்டவெளி பிரபஞ்சப் பொருள்கட் கெல்லாம்

வீடாகும் விண்கடந்து வானறிந்தால்

வெட்டவெளி அணு அறிவு ஒன்றாய்ப் போகும்

வீடுபேறு எனும் உயர்ந்த பதமும் ஈதே”.

“கரு அமைப்பு, உணவுவகை, எண்ணம், செய்கை,

ககனத்தில் கோள்கள் நிலை,சந்தர்ப்பத்தால்

வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல் எல்லாம்

வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்

தரும், மாற்றும், தரமொக்க இன்பதுன்பம்

தகுந்த அளவாம்; இதிலோர் சக்தி மீறி

பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறி

பின்னும் அதிகரித்துவிட மரணமாகும்.”

உடலில் இயற்கை செயற்கை ரசாயண மாற்றங்கள் :

” மனிதர்களின் உடலில் உள ரசாயணங்கள்

மாறிக் கொண்டே இருக்கும் இருவிதத்தில்,

தனியமைப்புக் கருவான நாத விந்தில்

தரம் மாறும் அண்ட கோடி சஞ்சாரத்தால்,

எனில் இவையே இயற்கை ரசாயண மாற்றம் ஆம்.

இயக்குவதால் உடலை, கொள்ளும் ஆகாரத்தால்

இனி அந்த உடலில் எழுகிற எண்ணத்தால்

ஏற்படும் மாற்றம் செயற்கை எனும் மாற்றமாகும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!