x

ஆகஸ்ட் 18 : நிறைவும் அமைதியும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


நிறைவும் அமைதியும் :

“வாழ்வின் உண்மை என்ன என்று சிந்திப்போம். பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்கு பின்னும் நமது நிலையென்ன? வாழ்வு காலத்தை எவ்வாறு அறிவின் விரிந்த நிலையில் கணித்துப் பார்க்கலாம். அறிவை விரிவாக்கிக் கொள்வோம். உண்மை உணர்வு ஏற்படுகின்றது. இந்தப் பேருலகம் ஒரு சத்திரம் போன்றது. பிறக்கும் ஒவ்வொருவரும் உலகம் என்ற சத்திரத்தில் தங்குகிறோம். நாம் குடிபுகும் அறையில் முன்னமே சிலர் இருந்தார்கள்.

பிறகும் சிலர் வந்து சேர்கிறார்கள். இதுவே குடும்பம். அவரவர்கள் தங்க வேண்டிய காலம் முடிந்தவுடன் புறப்பட்டு இயற்கையோடு கலந்து விடுகிறார்கள். வாழும்போது உடன் வாழ்பவர்கள் நட்பு ஏற்படுகிறது. அது முன்னும் இல்லை – பின்னும் இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள இந்த நட்பு பயனாகிறது. வாழத் தெரிந்தவர்கள் இந்த நட்பை வளர்த்து வருகிறார்கள். இன்பமடைகிறார்கள். வாழத் தெரியாதவர்கள் நட்பை குலைத்து துன்பத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். மேலும் ஒரு உண்மை உணர்வோம்.

பேருலகம் என்ற சத்திரத்திற்கு வரும்போது எவரும் ஏதும் கொண்டு வந்ததில்லை. அதிலிருந்து புறப்பட்டு போகும்போதும் ஏதும் கொண்டு போவதில்லை. மக்கள் பற்று, குடும்பப் பற்று எங்கே? சொத்து பற்றோ பொருள் பற்றோ எங்கே இருக்கிறது. இன்னும் விரிந்து உணர்வோம். எவ்வளவோ பொருட்களைத் தனது என்று உரிமை பாராட்டுகிறோம். இருக்கட்டும்.


குடல் சீரணிக்கும் அளவுக்கு மேல் உணவை கொள்ள முடியுமா? சுமக்கும் அளவிற்கு மேல் ஆடை உடுத்த முடியுமா? உடல் பருமனுக்கு மேல் நிலத்தை அனுபவிக்க முடியுமா? இவ்வுண்மைகளை விளங்கிக்கொண்டு அடிக்கடி நினைத்து நினைத்து அறிவில் அழுத்தமாகப் பதிவுகொண்டு குடும்பத்தில் அவரவர்கள் கடமைகளை ஆற்றினால் இது பற்றற்ற வாழ்வு ஆகாதா? எந்த சிக்கலையும் எளிதில் தீர்க்கும் கூர்மையும் அறிவுக்கு எப்போதும் இருக்கும். நிறைவும் அமைதியும் இந்த நிலையில் தானே கிடைக்கும்? இதை விடுத்து குடும்பத்தை விட்டு ஓடிப்போகும் கோழைத்தனம் துறவு ஆகுமா? தன்னை வளர்த்த, வாழவைத்த சமுதாயத்தையும் ஏமாற்றிவிட்டு தானும் ஏமாறும் ஒரு இழிவான செயலல்லவா கடமைகளை மறந்து நழுவிப் போய்விடும் செயல்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * *

ஏடுகளின் மூலம் எழும் ஞான ஆர்வம் :

“ஏட்டினிலே கதைத்து விட்ட ஞானம் கற்று

ஏக்கமுற்று அதையடைய எண்ணம் கொண்டு,

போட்டவிடந்தனிற் பொருளைத் தேடிக் காணும்

பொது அறிவைக் கூட உபயோகிக்காமல் –

நாட்டிலுள்ள அனுபோகப் பொருட்கள் மீது

நாடி நிற்கும் அறிவைப் பண்படுத்த வேண்டி

காட்டுக்குப் போய் கனியும் கிழங்கும் உண்டு

காலத்தைக் கழிப்பதனால் பலன் தான் என்ன?”

ஞானம் தேடும் பக்தர்கள் :

“தேடுகின்ற பொருள் என்ன ஏன் நமக்கு

தெரிந்தவர் யார் கிடைக்குமிடம்எது ஈதெல்லாம்

நாடுகின்ற வழக்கம் சிலபேரே கொள்வார்,

ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து

ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்

ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்

வாடுகின்றார், உளம்நொந்து இருளைத்தேட

விளக்கெடுத்துப் போவதைப் போல முரண்பாடன்றோ?”

“செய்யும் செயல்களைத் திருத்தமாக செய்யாவிட்டால்

செய்த செயல்களுக்கு ஏற்ப விளைவுகளும்

தாறுமாறாகத்தான் இருக்கும்”.

“சிறுகச் சிறுகப் பயின்றால்

சித்துக்கும் உண்மை நெறி”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!