x

ஆகஸ்ட் 17 : இறைத்தன்மை அடைய

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


இறைத்தன்மை அடைய :

இயற்கைத் தத்துவத்தையும், அதன் விளைவுகளையும் அன்றாடம் வாழ்வில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இயற்கையின் விளைவுகளுக்குத் தொடர்ந்து ஆளாகிக் கொண்டும், சில நேரங்களில் பயன்படுத்திக் கொண்டும் வருகின்றோம். இதனைச் செயல் விளைவுத் தத்துவம் என்று சொல்லலாம், விதி என்றும் சொல்லலாம். தெய்வச் செயல் என்றும் சொல்லலாம். வினை அல்லது வினைப் பயன் என்றும் இதை மதிக்கலாம்.

இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து கொள்கிறோமோ, அவ்வளவுக்குத் தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின் திண்மைக்கு ஏற்பவே செயல் திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையானது வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்.

மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் இயற்கையை அறியாமலும் அல்லது அறிந்தும் அதனை மதியாமலும் அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன. இந்நிலையைத் தான் ஆணவம் என்பார்கள். நாம் இதனைத் “தன்முனைப்பு” (Ego) என்கிறோம்.

உலக உயிர்கள் அனைத்திலும் மனிதன் மிகவும் உயர்ந்தவன். இயற்கையின் பரிணாமச் சிறப்புகள் அனைத்தும் அவனிடம் ஒருங்கிணைந்துள்ளன. மனிதனிடம் இவ்வளவு பேராற்றல் இருந்தும் அவன் தன் ஆற்றலின் பெருமையை, தன் ஆற்றலின் முழுமையை மறந்திருக்கிறான். அதனால் அப்பேராற்றல் அவனிடம் இயக்கம் பெறாமல் பலங்குன்றியிருக்கின்றது. இதைமூட நிலை எனலாம். மூடம் என்றால் மறைவு என்று பொருள். மூடன் என்றால் அறிவு இருந்தும் அது அவனிடம் இயக்கம் பெறாமல் இருப்பவன். அறிவு இருப்பது வெளிப்படாமல் அதாவது மறைவாக இருக்கும் நிலையில் உள்ளது. இயக்கம் பெறாமல் தடைப்பட்டிருக்கும் நிலையாகும்.


தன்முனைப்பின் காரணமாக மனிதனானவன் தன் பேரறிவைத் தன் உடல் அளவில் குறுக்கிக் கொண்டு, பொருள் அனுபோகத்திலும் புலன் அனுபோகத்திலும் மட்டுமே கவனம் கொள்ளச் செய்கிறது. அப்போது அவனது பேரறிவானது வெறும் பொருள் வழி, மற்றும் புலன்வழி குறுகித் தன் உயர்வையும் சிறப்பையும் இழந்துவிடுகிறது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

“அவரவர் வாழ்வைச் சீரமைக்கும்

அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே”.

“உண்மைதான் நம்மை மாற்றுமே தவிர

உண்மையை நாம் ஒரு போதும் மாற்றமுடியாது”.

அறிவும் புலன்களும் :

“அறிவைப் புலன்களில் அதிகநாள் பழக்கினேன்

அதன்பலன் உணர்ச்சிகள் அறிவை வென்றன;

அறிவையறிவால் ஆராயப் பழக்கினேன்

அந்த நிலையிலும் புலன்களை இயக்கினேன்,

அறிவு அகண்டாகாரத்தில் நிலை பெற

அதிகவிழிப்பும் வழக்கமும் பெற்றது;

அறிவு புலன்களை அறிந்தது வென்றது.

அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



Like it? Please Spread the word!