வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
அமைதி :
“அமைதி மனித இன வாழ்வில் நிறைவைத் தரும் தெய்வீக இன்பம். ஒரு மதிப்புடைய வாழ்க்கைச் செல்வம் அமைதி. அதனால்தான் மக்களில் பெரும்பாலோர் அமைதியை விரும்புகின்றனர். பேரறின்ஞர்கள் அமைதிக்காகவே தங்கள் ஆற்றலை அர்ப்பணிக்கின்றனர்.
எனினும் இன்று நாம் காண்பதென்ன? உலக முழுவதும் நோக்குவோம். எங்குமே அமைதி குலைந்து காணப்படுகின்றது. தனி மனிதரிடத்திலே, சமுதாயத்தின் ஊடே, உலக நாடுகளுக்கிடையே, எங்குமே நிலையான அமைதியில்லை. பிணக்கு, அச்சம், பகை, போர், இவை பெருகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலை நீடிக்கக்கூடாது. இது மாறித்தான் ஆக வேண்டும். மாற்றித்தான் ஆக வேண்டும். யார் மாற்றுவது? எப்படி மாற்றுவது? இவ்விரு வினாக்களில் யார் என்பதற்கு முதலில் விடை காண்போம். உலகை, மனித குளத்தை, நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டியது அறிஞர்கள் பொறுப்பு. சிந்தனையாளர்கள், எழுத்துலக மேதைகள், மதத் தலைவர்கள், ஆட்சித் தலைவர்கள், கல்விப் பொறுப்பாளர்கள் சமுதாய நலம் விழையும் செல்வந்தர்கள் இவர்கள் எல்லோருமே மனித குலத்தின் நலன் காக்கும் தகுதி பெற்றவர்கள், பொறுப்புடையவர்கள். உலகில் அமைதி நிலவ இப்பெருமக்கள் தான் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
இரண்டாவது வினாவான எப்படி என்பதற்கு விடை காண்போம். மனிதன் வாழ்வை நிறைவு செய்யும் துறைகள் இரண்டு. ஒன்று பொருள்துறை, மற்றது அருள்துறை. விஞ்ஞான வளர்ச்சி உலகில் பொருள் துறையை நிறைவு செய்துவிட்டது. அருள் துறையில் தான் மனித குலம் பின்னடைந்து நிற்கின்றது. ஒவ்வொரு உயிரும் தெய்வத்தின் திருவிளையாட்டரங்கம் என்பதை பெரும்பாலோர் உணர்ந்து கொள்ளவில்லை. அதன் விளைவாக மனிதனே மனிதனுக்குத் துன்பங்களை விளைவித்து வருகிறான். விஞ்ஞான மேன்மையால் பெருகும் பொருள்துறை வளர்ச்சி கூட, மனிதகுல சீரழிவிற்குத் திருப்பம் பெறுகின்றது. அணுகுண்டு முதலிய கொடிய போர்க்கருவிகள் மனித இனத்தையே அழித்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. இந்த அழிவு சூழ்நிலைகளை மாற்றியாக வேண்டும். இதற்கு நிச்சயமான ஒரே வழி அருள் துறையில் மனித குலம் போதிய வளர்ச்சி காண வேண்டும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * *
அமைதி பெறுவீர் :
“அறிவு என்பதோ களங்கமற்றது
அன்பு ஒன்றே அதன் இயல்பாகும்
அனுபவம் தேவைகள் என்னும் இரண்டால்
அதுவே குணங்களாய்க் களங்கமுற்றது;
அறிவு அகம் நோக்கித் தன்னிலை கண்டிட
அகன்று போகும் களங்கம். சுயமாகும்
அன்பு தொண்டு அறம் இயல்பாகிவிடும்
அந்த நிலைநாடி அமைதி பெறுவீரே!. ”
அமைதி இயல்பாகும்:
“அகத்தவமும் அறநெறியும் இணைந்து ஓங்க
ஆன்மாவின் வேண்டாத பதிவு நீங்கும்;
இகத்துறவு அத்தனையும் இனிமைநல்கும்
எப்போதும் மன அமைதி இயல்பதாகும்
மிகத்தெளிவு உண்மையுமாம்; இந்த உண்மை
மீறி எழும் பழவினையில் மறைந்துநிற்கும்
தொகுத்துணர்வாம் விரிந்த மனத் தொடர்முயற்சி
சுய நிலையாம் மெய்ப் பொருளாய்த் தன்னைத்தேரும்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.