வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
பிறப்பின் நோக்கம் :
“ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனிதன் வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும், எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி வந்து இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை உணர்ந்து அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். இது தான் பிறப்பின் நோக்கம். (This and this alone is the purpose of life).
சுருங்கச் சொன்னால் இயற்கையானது பல படித்தளமான பரிணாம இயக்கத்திலே தோற்றங்களாகி, ஓரறிவு முதற்கொண்டு ஆறறிவு வரையிலே வந்து மனிதனாகி, தன்னுடைய மதிப்பையும் தன்னுடைய தகைமையையும், தன்னுடைய அழகையும் ரசிக்கவும் உணரவும் அந்த இயற்கையே எடுத்துக் கொண்ட ஒரு உன்னதமான வடிவம் எதுவோ அதுதான் மனிதன். மனிதனில் தான் ‘அறிவினுடைய முழுமையைப்’ பெற முடியும்.
பழக்கத்தின் வழியே நாம் சிக்கி, தேவை, பழக்கம், சூழ்நிலையின் கட்டாயம் [நிர்பந்தம்] இந்த மூன்றினாலும் உந்தப்பட்டுச் செயல் செய்து கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து விளக்கம் பெற்று, விளக்கத்தின் வழியே நாம் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டுமானால் உடனடியாக விளக்கம் வராது, பழக்கத்திலிருந்து உடனடியாக மாறிவிடவும் முடியாது. முறையான பயிற்சி வேண்டும். விளக்கத்திலேயும் பயிற்சி வேண்டும். அப்படி விளங்கிக் கொண்டபிறகு நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போக வேண்டும், அதிலுள்ள வேறுபாடு, தூரம் என்ன என்பதைக் கண்டு, படிப்படியாகத் தன்னை மாற்றி உயர்த்தி அந்த இடத்தை அடைய வேண்டும். அத்தகைய திருப்பம் எதுவோ அது தான் பக்தி மார்க்கம் ஞான மார்க்கம் எனப்படும் ஆன்மீக வாழ்வு ஆகும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * *
இயல்பறிதல்:
“சுகதுக்கம் அனுபவித்தேன், சோர்வு கண்டேன்
சுய அறிவால் ஆராய்ந்தேன், முடிவுகாண
சுகதுக்கம் உடலியங்கும் அறிவில் கண்டேன்
சூட்சுமமாய் மனங்குவித்து, ஒடுங்கிநின்று
சுகதுக்கம் கடந்துமோன நிலையுணர்ந்தேன்
சொரூபத்தில் அரூபநிலை யறிந்துவிட்டேன்
சுகதுக்கச் சுழல்தாண்ட முறை கேட்போருக்குச்
சொற்குறிப்பால் “கட+உள்” என்று சுருக்கிச் சொல்வேன்.”
பிரம்மம்:
“நான் என்ற பிரம்மத்தை அறிந்தேன் அஃது
நினைவதனின் முடிவாகும், மூலமாகும்
சூனியமே! தொற்றமெலாம் அதிலிருந்தே!
சுத்த வெளி! மௌனமது! உவமை இல்லை!
ஊன் உருவில் ஓடும் உயிர்ச்சுழற்சி வேகம்
உற்பத்தி செய்கின்ற மின் சாரத்தில்
தோன்றுகின்ற அலை இயக்கம் அறிவு ஆகும்.
சுயநிலையில் தியானித்து அறிதல் வேண்டும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.