x

அக்டோபர் 21 : தெய்வீக நீதி

*வாழ்க்கை மலர்கள்: அக்டோபர் 21*
*தெய்வீக நீதி*
அறிவை வைத்துக் கொண்டு ஒருவர், இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இயக்கத்தில் உள்ள ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்து அப்படி ஆராய்வதன் மூலமாக வலி, நோய்கள், பிணக்குகள், வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் குழப்பங்களைத் தவிர்த்து, அமைதியோடும், பேரின்பத்தோடும் வாழக்கூடிய உயர் வாழ்க்கையைப் பெற முடியும். உலகத்தில் உள்ள சடப்பொருள்களும் சரி, உயிரினங்களும் சரி, எதுவானாலும் அவற்றோடு தொடர்பு கொள்ளுகிற போது ஒரு இணக்கமான, அளவு முறைக்கு உட்பட்ட வகையில் விழிப்பு நிலையோடு செயல்பட முடியும்.
பிரபஞ்சத்தில் உள்ள எதுவானாலும், உயிரினமானாலும் அல்லது வேறு இரசாயனக் கூட்டுப் பொருளானாலும், அது பரிணாம வளர்ச்சி நியதிப்படி, ஆதிநிலையிலிருந்து தற்போதைய நிலை வரை தொடர்ந்து ஜீவகாந்தத் தன்மாற்றத்தின் குண இயல்புகளோடு தான் அமைந்திருக்கிறது. எந்த ஒரு உயிரினத்திடனோ அல்லது சடப்பொருளுடனோ தொடர்பு கொள்ளும்போது ஒருவர் உருவம், நிறம், குணமாக அதனதன் தன்மையை அடைந்து தன்னுடைய சீவகாந்தத்தின் தன் மாற்றத்தையே எண்ணமாகவும், சொல்லாகவும், செயலாகவும் செலவிடுகிறார்.
அவருக்கும் அவர் தொடர்பு கொள்ளுகிற பொருளுக்கும் இடையே நடைபெறுகிற அலை இயக்கம் மோதுதல், பிரதிபலித்தல் என்கிற தன்மைகளோடு, அவரையும் அவர் தொடர்பு கொள்ளுகிற பொருளையும் ஒருவிதமான பாதிப்புக்கு உள்ளாக்கி அதற்கேற்ற விளைவுகளைத் தருகிறது. இந்த விளைவுகள் எந்தக் காரணத்தைக் கொண்டும், தொடர்பு கொள்ளுகிறவருடைய இயற்கையான தன்மையையோ அல்லது தொடர்பு கொள்ளப்படுகிற பொருள் அல்லது நபரின் இயற்கையான தன்மையையோ பாதிக்கக்கூடாது. அதாவது எந்தப் பொருளோடு தொடர்பு கொண்டாலும் புலன் மயக்கில் அதனோடு சிக்கிக் கொள்ளக் கூடாது. ஆன்மீக அறிவு பெற்ற ஒருவர் இதைத் தெய்வநீதியாகவும், வாழ்க்கை ஒழுக்கமாகவும் கொள்ள வேண்டும்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*


Like it? Please Spread the word!