x

அக்டோபர் 18 : “மெய் வழி அறிவு” ( God Consciousness)

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர், 18….
“மெய் வழி அறிவு” ( God Consciousness) :
“உயிர் என்னும் இயக்க ஆற்றலுக்கு மூலமாகவும், இயங்க இடமாகவும், முடிவாகவும் இருப்பது சுத்தவெளியே. இதுவே எல்லாம் வல்ல முழுமுதற்பொருள். இதன் இயக்கமே உயிர். உயிரின் படர்க்கையே மனம் என்னும் உண்மை உணர்வே அறிவின் முழுமை.
இவ்வுண்மையைத் தெளிவாக, தவத்தால் தானே அதுவாகி உணர்ந்தால் பேரியக்க மண்டலம் ஒரே ஒரு தொடரியக்கக் களமாகும். அதனினின்று நான் வேறு இல்லை. மற்ற உயிரோ பொருளோ வேறு இல்லை. அந்த முதற் பொருளே தனது இயல்பூக்கச் சிறப்பால் அனைத்துமாக விளங்குகிறது என்ற நிறைபொருள் அறிவு பூக்கும். அவ்விளக்கம் மறவாது உடலோடு உயிர் இயக்கம் நடைபெறும் வரையில், உயிர்கட்கு அறிவாலும், உடலாலும் கடமை செய்து மனிதகுல வாழ்விற்கு வழிகாட்டியாக வாழ்ந்து நிறைவு பெறுவதே மெய்வழி அறிவாகும்.
மனமே உயிராகி, தெய்வமாகி விரிந்த பேரியக்ககள உண்மையினை உணரும் முழுமையில் அறிவாகிறது. இது தெய்வமே மனித உருவில் அறிவின் முழுமையில் காணும் விளக்கம். இவ்விளக்கம் வேண்டிய மக்கள் அறிந்து கொள்ள விரித்த கருத்துக்களே வேதம். இதை ஓதியவனும் ஓதியதை உணர்ந்து தானானவனும் ஞானி.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இன்பநிலை எய்த வாரீர் :-
“அறிவானது நிறை நிலையை ஆதியாக
அமைதி நிலையில் உணர்ந்து அதுவாம் போது
அறிவு உயர்ந்தகன்று அமைதிப் பேரின்பத்தில்
அணுமுதலாய் அண்ட கோடி தானேயாக;
அறிவே அவ்வந் நிலையில் ஒழுங்கியக்க
அமைப்பாகி முறை பிறழாதியங்கும் மேலாம்
அறிவின் பெருமை யுணர்ந்த இன்பவெள்ளத்
தானந்தத்தில் திளைக்க வாரீர் வாரீர்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!