வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர், 14….
எண்ணப் பதிவு :
ஒரு எண்ணம் ஒருமுறை மனதில் தோன்றிவிட்டால் போதும், அது உயிரணுக்களில் பதிவாகி, அவற்றுக்கிடையே பிரதிபலித்து, அந்தப் பிரதிபலிப்பு மீண்டும் பதிவு, மீண்டும் பிரதிபலிப்பு என்றாகி அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கும். இதுவும் எண்ணத்தின் இயற்கை. எனவே ஒரு தீய எண்ணத்தை ஒருமுறை உள்ளே விட்டுவிட்டால் போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.
விருந்தாளி – வேண்டாத விருந்தாளியேயாயினும் முகத்தைச் சுளித்தால் போய்விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத்தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள் அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.
அதுமட்டும் அன்று. வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக்கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால் எழுந்த எண்ணம் சும்மா போய்விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனதில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்துக் கொண்டுவிடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
எண்ணத்தின் சிறப்பு :
“எண்ணம், சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்;
இன்பதுன்பம் விருப்பு வெறுப்பு உயர்வு தாழ்வு
எண்ணத்தின் நாடகமே, பிரபஞ்சத்தின்
இரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி.
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக் கப்பாலும் ஒன்றுமில்லை”.
நன்மையே நோக்கு :
“எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும்,
நன்மையே விளைவிக்க நாட்டமா யிரு”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.